×

மத்திய சுகாதாரத்துறை திட்டத்தின் கீழ் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவு!

புதுடெல்லி: மத்திய அரசின் சுகாதாரத்துறை திட்டத்தின் கீழ் இணையும் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு மருத்துவ திட்டம்(சி.ஜி.எச்.எஸ்) என்ற சிறப்பு திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. முதலில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டமானது, பின்னர் நாடு முழுவதுமுள்ள முக்கிய தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் என சுமார் 50 லட்சம் அதிகமானோர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால், சில முக்கிய தனியார் மருத்துவமனைகளை ஒரு நோயாளி அணுகும்போது, அவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவசர சிகிச்சைக்காக வருபவர்களையும் காக்க வைப்பதாகவும், முன்பணம் செலுத்தினால் மட்டுமே சிகிச்சையை தொடங்குவோம் என மருத்துவமனைகளில் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஏராளமான புகார்கள் மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பிவைக்கப்ட்டிருந்த நிலையில், அவற்றை ஆய்வு செய்து சி.ஜி.எச்.எஸ் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காதது உள்பட மேற்கூறிய நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்று நடந்தாலும், அம்மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ள மத்திய அரசின் சிறப்பு அங்கீகாரமானது ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1,200 மருத்துவமனைகள் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் 338 மருத்துவமனைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், 376 மருத்துவமனைகள் மீது விசாரணை நடைபெறுவதாகவும் கூறினார். மேலும் மோசடியில் ஈடுபடும் மருத்தவமனைகள் இந்த திட்டத்தின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது மட்டுமின்றி, அவற்றின் பெயர்கள் ஆயுஷ்மான் பாரத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படும் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : hospitals , CGHS, Central Health Department, Private Hospital, Emergency Department
× RELATED டெல்லி அரசு மருத்துவமனைகள், மொகல்லா...