×

தேர்வு கட்டணத்தை கண்டித்து விருத்தாசலம், திண்டிவனத்தில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கடலூர்: தேர்வு கட்டண உயர்வை கண்டித்து திண்டிவனம் மற்றும் விருத்தாசலத்தில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இக்கல்லூரியில் இளங்கலை வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பாடத்திற்கு 68 ரூபாய் தேர்வு கட்டணமாக இருந்ததை 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் முதுகலை வகுப்புகளுக்கு ஒரு பாடத்திற்கு தேர்வு கட்டணம் 160 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு கட்டண உயர்வை திரும்பப்பெற கூறி கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பறைகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து விருத்தாசலம் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பிரச்சனைக்கு தீர்வு காணுவதாக உறுதியளித்த நிலையில், அதனை ஏற்ற மாணவர்கள் தேர்வுக்கட்டண உயர்வை திரும்ப  பெறாவிட்டால் மீண்டும் பலகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். இதுபோல் தேர்வு கட்டண உயர்வினை கண்டித்து திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசு கல்லூரி மாணவர்கள் மூன்றாவது நாளாக வகுப்புக்களை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது கல்வி கட்டணத்தை உயர்த்திய கல்லூரி நிர்வாகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர் ஒருவர் கூறுவதாவது, கட்டண உயர்வை கண்டித்து மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தியும் கல்லூரி நிர்வாகமும், பல்கலைக்கழக நிர்வாகமும் எந்தவொரு தீர்வையும் அளிக்கவில்லை எனவும், தங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை தாம் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Tags : College students ,Tindivanam , Exam fees, condemnation, Vratasavalam, Tindivanam, college students, struggle
× RELATED பொள்ளாச்சி, நாகர்கோவிலை தொடர்ந்து...