ஆந்திராவிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தவர் கைது: ரூ. 7 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

சென்னை: ஆந்திராவிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பு கஞ்சா கடத்தி வந்த நபரை போதை தடுப்பு பிரிவு  போலீசார் கைது செய்தனர். ஆந்திராவிலிருந்து இன்று அதிகாலை சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ஹவுரா விரைவு ரயிலில் ஒருவர் கஞ்சா கடத்தி வந்துள்ளதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ரகசிய தகவலின் மூலம் கிடைத்த அடையாளத்துடன் அங்கு வந்த பாண்டி என்ற ரயில் பயணியை ரயில்வே போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அப்போது அவரது உடமைகளை சோதனையிட்டு பார்த்ததில் சுமார் 2 கிலோ வீதம் அவரது பையில் 9 பாக்கெட்டுகளில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தீவிர விசாரணையில் ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக ரயில் மூலம் கஞ்சா கொண்டுவரப்பட்டு பின்னர் கோயம்பேட்டிலிருந்து பேருந்து மூலம் தேனி, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு கஞ்சாவை எடுத்து செல்வதாக பாண்டி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி ரியாசுதனிடம் பாண்டி ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: