×

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை அக்டோபர் 3 வரை காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், ப.சிதம்பரத்தை அக்டோபர் 3ம் தேதி வரை காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் கடந்த 2018ல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. ஆனால் ப.சிதம்பரம் பலமுறை ஜாமீன் பெற்று வந்ததால் வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் விசாரணைக்கு ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று சிபிஐ முறையிட்டு வந்தது. இந்த நிலையில், சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 20ம் தேதி தள்ளுபடி செய்தது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி, ப.சிதம்பரம் வீட்டில் நுழைந்து, அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திவிட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ப.சிதம்பரத்தை செப்டம்பர் 5 முதல் 19 வரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இன்று ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ப.சிதம்பரத்தின் காவலை நீட்டிக்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால், ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காவலை நீட்டிப்பதற்கான எந்த காரணமும் இதில் குறிப்பிடப்படவில்லை என்று அவர் வாதிட்டார். அப்போது ஆஜரான ப.சிதம்பரத்தின் மற்றொரு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, நீதிமன்றம் காவலை நீட்டிக்க நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும்.

செப்டம்பர் 23ம் தேதியன்று உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வரவுள்ளதால் 4 நாட்களுக்கு மேல் காவலை நீட்டிக்கக் கூடாது என கூறினார். மேலும், ப.சிதம்பரத்தின் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரது எடை குறைந்துள்ளதாகவும், அவருக்கு சிறையில் நாற்காலி மற்றும் தலையணை கூட இல்லை என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அனைத்து சிறைவாசிகளின் உடல்நலம் மீதும் அக்கறை கொள்ளப்படும் என்றும், சட்டத்தில் அனுமதிக்கப்பட்டவை அனைத்தும் சிறை அதிகாரிகளால் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ப.சிதம்பரத்தின் காவலை அக்டோபர் 3 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் ப.சிதம்பரம் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



Tags : Delhi CBI ,Chidambaram ,Special CBI Court , INX Media, P.Chidambaram, Custody, Delhi, CBI Special Court
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...