பள்ளி செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

திருச்சுழி: திருச்சுழி அருகே பள்ளிக்குச் செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருச்சுழி அருகே உள்ள பிள்ளையார் தொட்டியாங்குளத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. கிராமத்தில் இட வசதியின்றி பிள்ளையார் தொட்டியாங்குளத்திலிருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் எர்ராம்பட்டி, பி.எம்.புதுப்பட்டி, கிருஷ்ணாபுரம், பண்ணை மூன்றடைப்பு உட்பட பல கிராமங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிப்பதற்காக டூவீலரில் வருகின்றனர்.

மேலும் செம்பட்டி, புலியூரான், பண்ணை மூன்றடைப்பில் வசிக்கும் மக்கள் பல்வேறு பணிகளுக்காக கல்குறிச்சி, காரியாபட்டி செல்லுவதற்கு குறுக்கு வழியாக இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 3 கி.மீ. தூரம் உள்ள சாலையை கடந்த 15 வருடத்திற்கு மேலாக சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் தார்ச்சாலை மண் சாலையாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் மழை காலங்களில் இச்சாலையில் செல்வது பெரும் பிரச்னையாக உள்ளது. இச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: