×

கம்பம் அருகே தரமின்றி நடைபெறும் குடிமராமத்து பணி

கம்பம்: கம்பம் அருகே கேசவபுரம் கண்மாயில் குடிமராமத்து பணியில் நடைபெறும் மடை மறு கட்டுமானப்பணி களப்பார்வையில் அதிகாரிகள் இல்லாததால் தரமின்றி நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி மற்றும் காமயகவுண்டன் பேரூராட்சிகளுக்கு இடையே கேசவபுரம் கண்மாய் உள்ளது. மழைக்காலங்களில் மேகமலை வனப்பகுதியில் வரும் தண்ணீர் யானை கஜம் ஓடை வழியாக கேசவபுரம் கண்மாயை வந்தடைகிறது. பொதுப்பணித்துறை மஞ்சளாறு வடிநிலக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் இக்கண்மாய் உள்ளது. 103.81 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் தண்ணீரால் இப்பகுதியில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததோடு, நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை மற்றும் திராட்சை விவசாயம் நடைபெற்று வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கண்மாயின் நீர்பிடிப்பு பகுதியை சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இதனால் பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு விவசாயிகள் சிலர் தாங்களாகவே முன்வந்து கண்மாயை தூர்வாரி கரையை பலப்படுத்தினர்.

இந்ர நிலையில் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் செலவில் இக்கண்மாயை தூர்வாரி கரையை பலப்படுத்தி, மடை எண் 1, மடை எண் 2ல் மறு கட்டுமானம் செய்யும் பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது.
தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மடை மறு கட்டுமான பணிகளுக்காக தரைதளம் கான்கீரீட் போடப்படுகிறது. இதில் 1:3:6 என்ற கணக்கில் கலவை போடவேண்டும். கலவை அளவையும், இந்த பணிகளை நேரில் இருந்து பார்வையிடவேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர்கூட சம்பவ இடத்தில் இல்லை. அதனால் வெறும் ஜல்லிக்கற்களும் சம்பந்தமே இல்லாத அளவில் பாறைத்துகளும் கலந்து அடித்தளம் போடுகின்றனர். தரமற்ற இந்த பணியால் மடை மறுகட்டுமானப்பணி செய்தும் பயனின்றி விரைவில் மடை சேதமடைந்து போய்விடும். எனவே, அதிகாரிகளின் முன்னிலையில் கட்டுமானப்பணி செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிடவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற வேண்டிய பணிகளின்போது அதிகாரிகள் எவரும் இல்லாததால், தரமற்ற முறையில் மடை மறு கட்டுமானப்பணி நடைபெறுகிறது. இதனால் 40 லட்சம் ரூபாயில் பணி செய்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும். எனவே, தேனி மாவட்ட கலெக்டர் இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதோடு, அதிகாரிகளின் முன்னிலையில் மடை மறு கட்டுமானப்பணி செய்ய உத்தரவிட வேண்டும் என்றனர்.

ஏற்கனவே நடவடிக்கை

தேனி மாவட்டத்தில் குடிமராமத்து பணியில் ஊழல் நடை பெறுவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆண்டிபட்டி ஒன்றியப்பகுதிகளில் குடிமராமத்து பணிகளில் முறைகேடு நடந்ததால் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட இரண்டு பேர்களை தேனி கலெக்டர் சஸ்பெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

மரங்களும் கடத்தல்

குடிமராமத்து திட்ட பணிகளின் மறைவில், இதே கேசவபுரம் கண்மாயில் இம்மாத தொடக்கத்தில் கண்மாய் கரையின் இருபுறமும் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புளியமரங்களின் கிளைகளும், ஒருசில இடங்களில் முழு மரங்களும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஆசியோடு வெட்டி கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : kampam, Citizenship Work
× RELATED சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்கும் பணி தொடக்கம்