திருவாரூர் அருகே கூடூரில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி

திருவாரூர்: திருவாரூர்அருகே கூடூரில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மீண்டும் ஆற்றுநீர் மற்றும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் அந்தப் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ. மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காணவில்லையெனில் போராட்டத்தில் ஈடுபட போவதாக மக்கள் அதிகாரம் அமைப்பு தெரிவித்துள்ளது. திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை வழியாக காரைக்குடிக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு தற்போது ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ரயில் பாதையில் ஏற்கனவே இருந்து வந்த ரயில்வே கேட்டுகள் பலவற்றிலும் ஆட்களை குறைப்பதற்காக அந்த ரயில்வே கேட் இருந்த இடத்தில் ரயில்வே லைன் அடிப்பகுதியில் பொதுமக்கள் சென்று வரும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி திருவாரூர் அருகே கூடூர் என்ற இடத்தில் இதே போன்று ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சுரங்கப்பாதையானது அங்கு உள்ள காட்டாற்றின் கரையை ஒட்டியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது அந்தக் காட்டாற்றில் தண்ணீர் செல்வதால் சுரங்கப் பாதையின் வடிகாலுக்காக அமைக்கப்பட்டுள்ள குழாயில் ஆற்றின் நீரானது கடந்த வாரம் உட்புகுந்து இந்த சுரங்க பாதையை அடைத்ததால் இந்த சுரங்கப்பாதை ஒட்டிய கூத்தங்குடி, அன்னுக்குடி, அன்னவாசல், கல்யாணமகாதேவி, கட்டளை தெரு உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இந்த சுரங்க பாதையை கடந்து திருவாரூர் நகரத்திற்குள் வரமுடியாமல் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து திருவாரூர் தாசில்தார் நக்கீரன் மூலம் வருவாய் துறையினர் டீசல் இன்ஜின் கொண்டு நீரை முழுமையாக வெளியேற்றினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருவாரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் மீண்டும் இந்த சுரங்க பாதையில் ஆற்று நீரும், மழை நீரும் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மீண்டும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு நிரந்தர தீர்வினை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ளவில்லையெனில் போராட்டத்தில் ஈடுபட போவதாக மக்கள் அதிகாரம் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், இதற்கு நிரந்தர தீர்வினை மாவட்ட நிர்வாகமும் ரயில்வே துறையும் உடனடியாக எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில் இதற்காக மக்கள் அதிகாரம் சார்பில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Tags : railway subway ,Thiruvarur ,Koodur , Thiruvarur, Rainwater
× RELATED கிண்டி - பரங்கிமலை இடையே கிடப்பில்...