×

நெல்லையில் மீண்டும் அபாய மருத்துவ கழிவுகள் சாலையோரம் வீச்சு

நெல்லை: நெல்லையில் மீண்டும் அபாய மருத்துவக்கழிவுகள் மற்றும் கெட்டுப்போன மருந்து மாத்திரைகள் பொறுப்பற்ற முறையில் குப்பையில் கொட்டப்பட்டு கிடந்தன. ஜவுளிக்கடை சோகேஷ் பொம்மைகளும் வீசப்பட்டு கிடக்கின்றன.
நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் அபாயகரமான மருத்துவ கழிவுகளை சாலையோரங்களிலும், குப்பைகளிலும் வீசி எறிவது தொடர்கதையாக உள்ளது. மருத்துவமனை கழிவுகளை அழிப்பதற்கு என நியதிகள் உள்ளன. அவற்றை முறையாக கையாண்டு அழிக்கும் அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். இதுபோல் மருந்தகங்களில் விற்கப்படும் மருந்து மாத்திரைகளில் காலாவதியானவற்றை முறைப்படி தேதி போட்டு தனியாக கட்டி வைக்கவேண்டும். இவற்றை சம்பந்தப்பட்ட மருந்து கம்பெனிகளிடம் திரும்ப ஒப்படைத்து அவர்கள் மூலம் முறைப்படி அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே சாலை ஓரங்களில் அபாயகரமான மருத்துவ கழிவுகள் மற்றும் கெட்டுப்போன மருந்து மாத்திரைகள் வீசப்படுவது அடிக்கடி நிகழும் சம்பவமாகி விட்டது. கேரளாவில் இருந்தும் அவ்வப்போது ரகசியமாக கழிவு குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. நெல்லை நயினார்குளம் - தச்சநல்லூர் சாலை ஒரு பகுதி வயலாகவும் மற்றொரு பகுதி குளமாகவும் இருப்பதால் இச்சாலையில் அதிக கட்டிடங்கள் இல்லை.

இதனால் இப்பகுதியை குப்பை கொட்டும் களமாக சமூக பொறுப்பில்லாதவர்கள் மாற்றி வருகின்றனர். இந்த சாலையோரம் வயல்கரை அருகே அனைத்து விதமான குப்பைகளும் கொட்டுவது வாடிக்கையாகிவிட்டது. பழைய வாகன கழிவுகள், மருத்துவ கழிவுகள் சாக்கு மூடைகளில் கட்டப்பட்டு நள்ளிரவு வாகனங்களில் கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர். நேற்று இந்தப்பகுதியில் ஏராளமான கெட்டுபோன மருந்துகள், மாத்திரைகள், கண் மருந்துகள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால்மாவு பாக்கெட்டுகள், சிரப் பாட்டில்கள் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். மேலும் ஜவுளி கடைகளில் வைக்கப்பட்டு உடைந்த ஷோகேஷ் பொம்மைகள் உள்ளிட்டவைகளும் வீசப்பட்டு கிடக்கின்றன. சிரப், குழந்தைகளுக்கான மாவு பாக்கெட்டுகளை யாராவது சிறுவர்கள் எடுத்து ஆர்வத்துடன் குடித்தால் விபரீதம் நிகழலாம். இதைப்பற்றி கவலைப்படாமல் வீசி சென்றதை அவ்வழியாக செல்பவர்கள் கண்டு அதிர்ச்சியடைகின்றனர். எனவே சுகாதார அதிகாரிகள் இப்பகுதியில் அடிக்கடி ஆய்வு செய்து அபாய கழிவுகளை அற்றுவதுடன் இதுபோன்ற கழிவுகளை பொறுப்பற்ற முறையில் வீசி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Risk Tirunelveli , Tirunelveli Medical waste
× RELATED யானை தாக்கி விவசாயி பலி