×

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டம் அரசு போக்குவரத்தை தனியார் மயமாக்கும்: தொழில் முனைவோர் அதிர்ச்சி தகவல்

சேலம்: மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம், சிறு தொழில்களை முடக்குவதோடு, அரசு போக்குவரத்தை தனியார் மயமாக்குவதற்கும் வழிவகுக்கும் என்று தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர். நாட்டில் வாகன விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ஏற்கனவே உள்ள வாகன போக்குவரத்து சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று (19ம்தேதி) லாரிகள் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க, புதிய மோட்டார் வாகனச்சட்டம் சிறுதொழில் நிறுவனங்களை முடக்குவதோடு, அரசு போக்குவரத்து துறையை முழுமையாக தனியாருக்கு தாரை வார்த்து விடும் என்கின்றனர் இதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ெதாழில் முனைவோர்.

இது குறித்து தமிழக தொழில் முனைவோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: 15ஏக்கர் நிலம் வைத்திருந்தால் மட்டுமே டிரைவிங் ஸ்கூல் நடத்த முடியும். வாகனத்தை தெருவோர மெக்கானிக் ஷாப்பில் ரிப்பேர் செய்யக்கூடாது. தயாரித்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில்தான் சர்வீஸ் செய்ய வேண்டும். அனைத்து வாகனங்களுக்கும் 5ஆண்டுகளுக்கு ஒரு முறை எப்.சி. எடுக்க வேண்டும். வாகனம் பழுதுபட்டால் பழுதுநீக்கம் செய்யக்கூடாது. பாகத்தை மாற்றிவிட வேண்டும் என்பதும் இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. இதனால் ஒன்றிரண்டு வாகனங்கள் வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் இனி பிழைக்க முடியாது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களே நிலைக்கும். அதோடு சிறிய ஒர்க்‌ஷாப்புகள், டிரைவிங் ஸ்கூல், ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள் இருக்காது என்ற நிலையே உருவாகும். 15ஆண்டுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு தடை விதிப்பதால் வாகன உற்பத்தி அதிகரிக்கும். அதன்மூலம் 4சதவீதம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். 10லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் ஓடும் லாரிகளில் 20 சதவீதம், 15 வருடங்களுக்கு முற்பட்டதுதான். இதற்கு தடைவிதிப்பதால் டிரைவர்கள், சிறு முதலாளிகள், மெக்கானிக்குகள் என பல லட்சம் பேரின் வாழ்வாதாரம் பறிபோகும் என்பதை மறந்துவிட்டார்கள்.

சாலை பர்மிட்கள் உலக அளவில் ஏலம் விடப்படும் என்றும், மாநில அரசு விரும்பினால் போட்டியிட்டு ஏலம் எடுக்கலாம். டிக்கெட் கட்டணத்தை ஏலம் எடுத்தவர்களே தீர்மானிக்கலாம் என்றும் இந்த சட்டம் சொல்கிறது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள அரசுப் போக்கு வரத்துக் கழகங்கள் சார்பில், தற்போது இயக்கும் லட்சக்கணக்கான பேருந்துகள் நிறுத்தப்படும். நஷ்டம் ஏற்படுத்தும் கிராமப்புற பேருந்து சேவைகள் ரத்தாகும். இதனால் பல கிராமங்கள் பேருந்து தொடர்பை இழக்கக்கூடும். இவற்றில் பணி புரியும் 10 லட்சம் பணியாளர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகும். போக்குவரத்து தொடர்பான விதிமுறைகளை உருவாக்கவோ, வரிகளைத் தீர்மானிக்கவோ மாநில அரசுக்கு உரிமையில்லை. மத்திய போக்குவரத்துக் கமிட்டிதான் தீர்மானிக்கும். டோல்கேட்டுகள் அதிகாரம் மிக்க மையங்களாகும். அதிக லோடு ஏற்றினாலோ, தகுதியில்லாத வாகனம் ஓட்டினாலோ டோல்கேட் ஊழியர்கள் வாகனத்தை சிறைப் பிடிக்கலாம் என்ற சட்டம் அமலாகும் போது, மாநில அரசுகள் போக்குவரத்துக் கழகங்களைக் கூட நடத்த முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அபராதம் உயர்ந்தால் லஞ்சமும் அதிகரிக்கும்

‘‘உலகிலேயே அதிக சாலை விபத்துகள் நடப்பது இந்தியாவில்தான். விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் வளர்ந்த நாடுகளின் சட்டத்தை இங்கே புகுத்துவதால் வேதனையே அதிகரிக்கும். இங்கே பல பகுதிகளில் நல்ல சாலையே இல்லை. எனவே வசதிகளை மேம்படுத்தாமல் மக்கள் தலையில் அபராதத்தை சுமத்துவது மிகப்பெரும் அபத்தம். அபராதம் உயரும் போது லஞ்சமும் அதிகரிக்கும். நடைமுறையில் இருக்கிற குறைபாடுகளைத் தீர்த்துவிட்டே இப்படியொரு சட்டத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்,’’ என்பது போக்குவரத்து ஆர்வலர்களின் ஆதங்கம்.

Tags : Government , Private Transport, Government Transport
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...