சந்திரயான் - 2 சாதிக்க கடிதம் எழுதிய தேவகோட்டை மாணவிக்கு இஸ்ரோ தலைவர் சிவன் கடிதம்

தேவகோட்டை: சந்திரயான் - 2 விண்கலம் குறித்து இஸ்ரோ எடுத்த முயற்சியை ஊக்கப்படுத்தி கடிதம் எழுதிய தேவகோட்டை பள்ளி மாணவிக்கு, இஸ்ரோ தலைவர் சிவன் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி 6ம் வகுப்பு மாணவி நதியா. இவர், ‘‘சந்திரயான் - 2 விண்கல முயற்சியை கைவிட்டு விடாதீர்கள். எங்கள் பிரார்த்தனைக்கு வெற்றி கிட்டும்’’ என்று இஸ்ரோ தலைவர் சிவனுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அந்த மாணவி படிக்கும் பள்ளிக்கு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அதில் அவர் கூறியிருப்பதாவது: சந்திரயான் - 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்காக உங்கள் பள்ளியில் பிரார்த்தனை கூட்டம் நடத்தியதை அறியும்போது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் உங்கள் பள்ளி மாணவி, சந்திரயான் - 2 தரையிறங்கும் 6 நிலைகளை விரிவாக சொல்லிய வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றியதற்கு மிக்க நன்றி. முடிந்த அளவிற்கு முயற்சிகள் எடுத்தும் சந்திரயான் - 2 விண்கலத்தை நிலவின் தரையில் வெற்றிகரமாக இறக்க முடியாமல் போய்விட்டது.

இந்தப் பின்னடைவால் நாங்கள் மனம் கலங்காமல் உங்களைப் போன்ற நல் உள்ளங்களின் வாழ்த்துக்களால், இந்தியா விண்வெளித்துறையில் சாதனை படைக்க தொடர்ந்து உழைப்போம். உங்கள் கல்வி சேவைக்கும், உங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு கடிதத்தில் அனுப்பியுள்ளார். இதனால் அப்பள்ளி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: