×

பன்வாரிலால் புரோகித்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு திமுக போராட்டம் ஒத்திவைப்பு : கவர்னர் விளக்கத்தை ஏற்று அறிவிப்பு

சென்னை: கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசியதை தொடர்ந்து, இந்தி திணிப்பை எதிர்த்து திமுக சார்பில் நாளை நடைபெற இருந்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டின் ஒரு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்தி திணிப்பு கருத்தை கண்டித்து நாளை (20ம்தேதி) மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தீர்மானம் நிறைவேற்றியது. திமுக சார்பில் நாளை மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்திக்க அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று, நேற்று மாலை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.   இந்த சந்திப்பு மாலை 4.55 மணி முதல் 5.40 மணி வரை நடந்தது. திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்பி உடன் சென்றிருந்தார்.

பின்னர் வெளியில் வந்த மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் நோக்கி சென்றார். அங்கு, பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்பி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்பு மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக கவர்னர் என்னைச் சந்திக்க விரும்புவதாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவரை சந்தித்தபோது, நாளை தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெறக்கூடிய கண்டன ஆர்ப்பாட்டத்தை பற்றி அவர் பேசினார். என்ன காரணத்திற்காக ஆர்ப்பாட்டம் நடைபெற போகிறது என்பதை விளக்கிச் சொன்னோம். அதைத்தொடர்ந்து கவர்னர், ‘மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னக் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. எந்த காரணத்தைக் கொண்டும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்ட மாட்டாது’, என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொன்னார்.

இதை மத்திய அரசு சொல்ல முன்வருமா என்று நாங்கள் கேட்ட நேரத்தில், ‘நான் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கக் கூடியவர். எனவே, நிச்சயமாக மத்திய அரசு சொல்லித்தான் நான் இதை உங்களிடத்தில் சொல்கிறேன்’, என்கிற ஒரு உறுதியை அவர் எங்களிடத்தில் சொன்னார். அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஊடகங்களின் மூலமாக ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். இந்தியாவின் ஒரே மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மிகத் தெளிவாக அவர் எடுத்துச் சொல்லி இருக்கிறார். எனவே, அவர் சொன்ன அந்த கருத்தை மனதில் கொண்டு, வருகிற 20ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நாங்கள் ஒத்திவைத்திருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன். எந்த நிலையில் இந்தி திணிக்கப்பட்டாலும், நிச்சயமாக கலைஞர் வழிநின்று இந்தி திணிப்பை திமுகவினரான நாங்கள் என்றும் எதிர்ப்போம் என்று கூறினார்.

திமுகவுக்கு கிடைத்த வெற்றி பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய கருத்தை தெரிவித்து, அதற்குப் பிறகு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள், போராட்டங்கள் எல்லாம் அறிவித்ததற்கு பிறகு இரண்டு மூன்று நாட்கள் கழித்து தன்னுடைய விளக்கம் தெரிவிக்கிறார். இது ஆழம் பார்ப்பதற்காக என்று நினைக்கிறீர்களா? கவர்னர் அழைத்து எங்களிடம் பேசி இருக்கிறார். எனவே திமுக நடத்தக்கூடிய போராட்டம் என்பது தமிழ்நாடு அளவோடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பரவக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. எனவே, அவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்து, விளக்கம் தர வேண்டும் என்பதற்காக இதை தந்திருக்கலாம்.

திமுகவின் எதிர்ப்புக்கு அச்சப்பட்டு இந்த பின்வாங்கும் முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? ஏற்கனவே தபால் துறையில், ரயில்வே துறையில் நடந்த ஊழியர்கள் தேர்வு போன்றவற்றுக்கெல்லாம் தொடர்ந்து நாங்கள் போராட்டம் நடத்தி இருக்கிறோம். உடனடியாக அவை திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே, இப்போது நாங்கள் அறிவித்து இருக்கக்கூடிய போராட்டத்தின் காரணமாக, அவர் கூறிய கருத்திற்கு விளக்கம் கூறப்பட்டிருப்பது உள்ளபடியே திமுகவிற்கு கிடைத்து இருக்கக்கூடிய ஒரு மாபெரும் வெற்றியாகத்தான் கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : MK Stalin ,meeting ,DMK ,Panwarilal Brokit , MK Stalin's meeting , Panwarilal Brokit
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...