வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்தபோது பார்வையிட்ட நவீன கட்டமைப்பை தமிழகத்தில் ஏற்படுத்த திட்ட அறிக்கைக்கு 290 கோடி ஒதுக்கீடு

சென்னை: முதல்வர் எடப்பாடி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பார்வையிட்ட கட்டமைப்புகளை தமிழகத்தில் ஏற்படுத்துவது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதற்காக திட்ட அறிக்கைகள் தயாரிக்க  தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு  வாரியத்திற்கு 289 கோடியே 82 லட்சம் நிதி அனுமதிக்கப்பட்டது. தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வு கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந் கூட்டத்தில், முதல்வர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அங்கு பார்வையிட்ட கட்டமைப்புகளை பற்றி விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டமைப்பு திட்டங்களான, சென்னை நிதி தொழில்நுட்ப நகரம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த சுற்றுலா வளர்ச்சி திட்டம், சென்னை ஒருங்கிணைந்த வாகன நிறுத்துமிட மேலாண்மை திட்டம், சதர்ன் ஸ்ட்ரக்சுரல்ஸ் போன்ற அரசு நிறுவனங்களின் நிலங்களில் புதிய முதலீடுகளை ஈர்த்தல், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து பணிமனைகளை நவீனப்படுத்தும் திட்டம், சென்னை இலகு ரயில் பயணத் திட்டம், வெளி வட்டச்சாலை - தொழில் மேம்பாட்டு திட்டம், கடல் அருங்காட்சியகம் அமைத்தல், அறிவியல் நகரத்தில் தொழில்நுட்பம் மூலம் அறிவுசார் காட்சியகம் அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களுக்கான செயல்திட்டம் குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இந்த திட்டங்களுக்கான திட்ட அறிக்கைகள் தயாரிப்பதற்கென தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திற்கு 289 கோடியே 82 லட்சம் நிதி அனுமதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: