வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் புதிய மொபைல் ஆப் வசதியை அனைவரும் பயன்படுத்த வேண்டும் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுகோள்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளிட்ட திருத்தங்கள் செய்ய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய மொபைல் ஆப் வசதியை வாக்காளர்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம்’ என்ற பெயரில், கடந்த 1ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை புதிய மொபைல் ஆப் ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் ஆப் மூலம், வாக்காளர்கள் தங்களிடம் உள்ள புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில் பதிவாகி இருக்கும் பிறந்த தேதி, பெயர், உறவு முறை, புகைப்படம், பாலினம் ஆகியவை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் தவறான தகவல் இருந்தால், வாக்காளர்களே நேரடியாக Voters help Line என்ற மொபைல் ஆப் மூலம் திருத்தங்கள் செய்யலாம். இப்படி மொபைல் ஆப் மூலம் திருத்தம் செய்தவர்களின் விண்ணப்பத்தை தேர்தல் அலுவலர்கள் தங்கள் வீடுகளுக்கே வந்து சரிபார்க்கும் பணியை மேற்கொள்வார்கள்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 18 நாட்களில் அதாவது நேற்று (18ம் தேதி) வரை, 2 லட்சத்து 33 பேர் Voters help Line என்ற மொபைல் ஆப் வசதியை பயன்படுத்தி உள்ளனர். இதில் 18,372 பேர் தங்கள் பெயர், விலாசத்தை திருத்தம் செய்துள்ளனர். மகளிர் திட்ட மேலாண்மை இயக்குனருடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், மகளிர் குழுவில் உள்ள அனைவரும் இந்த மொபைல் ஆப் வசதியை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலை சரி செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது. இன்று, தலைமை செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறையில் உள்ள இரண்டு பேரை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது. அதன்மூலம் தலைமை செயலக ஊழியர்களும் இந்த வசதியை பயன்படுத்த முடியும்.

தமிழக வாக்காளர்கள் அனைவரும், தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள மொபைல் ஆப் வசதியை பயன்படுத்தி, தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா, அதில் உள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தவறாக இருந்தால் திருத்தம் செய்து கொள்ளலாம். இந்த வசதி, வருகிற 30ம் தேதி வரை மட்டும் இருக்கும். அதேபோன்று, வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் துண்டுபிரசுரம் விநியோகம், அனைத்து ஓட்டுச்சாவடிகள், பொது இடங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டவும், கலைநிகழ்ச்சிகள் நடத்தி மக்களிடம் இன்னும் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்பாடு செய்ய அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: