செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் பரபரப்பு டாக்டர், எஸ்.ஐ. மீது சரமாரி தாக்குதல் போதை சட்டக்கல்லூரி மாணவன் கைது

* மருத்துவர்கள், நர்ஸ்கள் போராட்டம்

* சிகிச்சையின்றி நோயாளிகள் கடும் அவதி

சென்னை : செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டாக்டர், எஸ்ஐ மற்றும் காவலாளியை சரமாரியாக போதை சட்டக்கல்லூரி மாணவன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து டாக்டர்கள், நர்ஸ்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அம்பத்தூர் பாடியை சேர்ந்தவர் விக்னேஷ் (29). ஆந்திராவில் உள்ள ஒரு சட்ட கல்லூரியில் படித்து வருகிறார். இவர், தனது மனைவியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமனார் வீடான செங்கல்பட்டு அழகேசன் நகருக்கு சென்றார். பின்பு நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விக்னேஷ் மது அருந்தினார். போதை தலைக்கு ஏறியதும் அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார். சிலரை அடித்தும் உதைத்தார். கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் விக்னேஷின் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன், நேற்று அதிகாலை 1 மணி மணியளவில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் விக்னேஷ் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அங்கிருந்த டாக்டர்களிடமும் தகராறு செய்துள்ளார். நர்சுகளை தகாதவார்த்தையால் திட்டியுள்ளார். உடனே, இரவு காவலாளி அங்கு ஓடி வந்தார். அவரை சரமாரியாக அடித்து உதைத்தார்.

இதையடுத்து அங்கு இரவு காவல் பணியில் இருந்த திருக்கழுக்குன்றம் எஸ்ஐ லிங்கேஸ்வரன் வந்துள்ளார். அவரையும் சரமாரியாக தாக்கி, சட்டையை கிழித்தார் விக்னேஷ். இதனால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களது உறவினர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன், டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விக்னேஷை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். டாக்டர், பயிற்சி டாக்டர்கள், நர்ஸ், காவலாளி ஆகியோரை தாக்கியதால் ஆத்திரமடைந்த அவர்கள், பணிகளை புறக்கணித்துவிட்டு, மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.இதை அறிந்த மருத்துவமனை டீன் அரிகரன், நிலைய மருத்துவர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாக்டர்கள், ‘கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் தாக்கப்பட்டார். இப்போது, வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து இதுபோன்ற சம்பவம் நடந்து வருகிறது. இதனால் எங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்து விட்டோம். ஆனால் நிறைவேற்றுவதில்லை. இதற்கு ஒரு முடிவு தெரியும்வரை போராட்டத்தை கைவிட போவதில்லை’’ என்று ஆவேசமாக கூறினர்.

இவர்களுக்கு ஆதரவாக மருத்துவமனை நர்ஸ்கள், ஊழியர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்நிலையில் ஆர்டிஓ செல்வம், தாசில்தார் சங்கர் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை அதற்கு பிறகு நேற்று காலை முதல் மாலைவரை போராட்டம் நீடித்தது. செங்கல்பட்டு மருத்துவமனை வளாகத்தில் நடந்த போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள், டாக்டர்கள், இந்திய மருத்துவ சங்கத்தினர், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் மருத்துவமனை பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டது. நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நேற்று மாலை செங்கல்பட்டு அர்டிஓ செல்வம், தாசில்தார் சங்கர், மருத்துவமனை டீன் அரிகரன் ஆகியோர் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, டாக்டர்கள் சார்பில் டாக்டர்களை தாக்கிய வாலிபரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், மருத்துவமனை எதிரில் விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும், மருத்துவமனை எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும், நிரந்தரமாக மருத்துவமனை வளாகத்தில் ஒரு காவல் நிலையம் அமைக்க வேண்டும், அதுவரை காலை மற்றும் மாலை நேரங்களில் 5 போலீசார் காவலில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றப்படுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். குடிபோதையில் சட்டக்கல்லூரி மாணவன் செய்த ரகளையால் நேற்று முன்தினம் இரவு 11 மணியில் இருந்து நேற்று மாலை 3 மணி வரை போராட்டம் தொடர்ந்தது. இதனிடையை டாக்டரை தாக்கிய விக்னேைஷ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: