ஜிஎஸ்டி மூலம் தமிழக வணிகவரித்துறைக்கு வருவாய் அதிகரித்துள்ளதா? : அமைச்சர் விளக்கம்

சென்னை: ஜிஎஸ்டி மூலம் தமிழக வணிகவரித்துறைக்கு வருவாய் அதிகரித்துள்ளதா என்பது தொடர்பாக அமைச்சர் கே.சி.வீரமணி விளக்கம் அளித்துள்ளார். வணிக வரித்துறை சிறப்பாக செயல்பட்டமைக்கு நல் ஆளுமை விருது சுதந்திர தின விழாவில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு நிகழ்ச்சி நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடந்தது. இதில் சிறப்பாக பணியாற்றிய 72 பேருக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கினார். அப்போது, அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:

ஜிஎஸ்டி அமைத்ததற்கு பின் தமிழகத்தில் வரி வருவாய் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் வரி வருவாய் இலக்கை விட அதிகமாக எட்டியுள்ளது. வருவாய் ஈட்டுவதில் நாட்டில் 2வது இடத்தில் தமிழகம் உள்ளது.

ஜிஎஸ்டிக்கு முன்பு ரூ.60 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டது. அதற்கு பின் ரூ.90 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாற்றியமைத்து, வியாபாரத்தை பெருக்கி வருகிறது. இதன் மூலம் வருகிற ஆண்டில் முதன்மை மாநிலமாக வந்து தேசிய அளவில் விருது பெறுவோம். வரி வருவாய் தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதன் மூலம் வியாபாரிகள் எவ்வித அச்சமும் இல்லாமல் தமிழகத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஆணையர் சோமநாதன், கூடுதல் ஆணையர் லட்சுமி பிரியா, இணை ஆணையர் சுந்தரவல்லி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: