போக்குவரத்து விதிமீறல் அபராதம் உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று லாரி ‘ஸ்டிரைக்’ : தமிழகத்தில் 30 கோடி சரக்குகள் தேக்கமடையும்

சேலம்: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் இன்று லாரி ஸ்டிரைக் நடக்கிறது. இதனால், தமிழகத்தில் 30 கோடி சரக்குகள் தேக்கமடையும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பு, வாகன பதிவு கட்டணம் உயர்வு, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் உயர்வு போன்றவை அமலுக்கு வந்துள்ளது. அபராதத்தை குறைக்க வலியுறுத்தியும், நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் இன்று நடத்துகிறது. அதன்படி, தமிழகத்தில் இன்று 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் ஓடாது என்றும், இதனால் ரூ.30 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடையும் எனவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி கூறுகையில்,  19ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று  கூறினார்.

இந்த போராட்டம் குறித்து, சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறுகையில், தமிழகத்தில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச், ஜவுளிகள், இரும்பு கம்பிகள், ஸ்டீல் தகடு, தேங்காய், காய்கறிகள் உள்பட பல்வேறு விதமான பொருட்கள் வடமாநிலங்களுக்கு செல்கின்றன. இதேபோல் வடமாநிலங்களில் இருந்து பருப்பு, பூண்டு, வெங்காயம், தானிய வகைகள், ஜவுளிகள், மார்பிள் கற்கள், கிரானைட் கற்கள் உள்பட பல்வேறு விதமான பொருட்கள் தமிழகத்திற்கு வருகின்றன. போக்குவரத்து விதிமீறல்களுக்கு மிக அதிகப்படியான அபராதத்தை விதித்து வசூலிக்கின்றனர்.
மோட்டார் வாகன சட்ட பாதிப்பு, சுங்கக்கட்டணம், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி இன்று (19ம் தேதி) நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தத்தை அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது. இதற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழுஆதரவை அளிக்கிறது. இன்று தமிழகம் முழுவதும் உள்ள 4.50 லட்சம் லாரிகளும் ஓடாது. லாரிகள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் ₹30 கோடி அளவுக்கு சரக்குகள் தேக்கமடையும். எங்களுக்கு ₹3 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Large trucks, nationwide today condemning, traffic violation fines
× RELATED லாரி மோதி வாலிபர் பலி