மத்திய அரசு தீவிர பரிசீலனை நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் எம்பி.களுக்கு என புதிதாக கட்டப்பட்ட இரண்டடுக்கு வீடுகளை கடந்த மாதம் 19ம் தேதி திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2022ம் ஆண்டிற்குள் புதிய நாடாளுமன்றம்  கட்டப்படும். இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது,’ என்று கூறினார்.இது பற்றி மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி டெல்லியில் நேற்று கூறியதாவது: புதிய நாடாளுமன்றம், மத்திய தலைமைச் செயலகக்  கட்டிடம் கட்டுவது தொடர்பான திட்டம் குறித்து ஆலோசிக்க, மத்திய அரசு கடந்த 2ம் தேதி அழைப்பு விடுத்துள்ளது. கட்டுமான நிறுவனங்கள் டிசைன்களை சமர்ப்பித்த பின்னரே இது  குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் 190 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.

அவர்களிடம் சிறந்த கட்டிடக்கலை வல்லுனர்கள் இருந்தனர். அப்போது, அவர்களால் நாடாளுமன்றம் கட்டப்பட்டது. புதிய நாடாளுமன்றம் கட்டி  முடிக்கப்பட்ட பின்னர், 190 ஆண்டு தொன்மை வாய்ந்த நாடாளுமன்றத்தின் வடக்கு, தெற்கு பிளாக் பகுதிகள் ஆங்கிலேய கட்டிடக்கலையின் பெருமையை பறைசாற்றும் அருங்காட்சியகமாக மாற்றப்படும். அமைச்சர்கள், எம்பி.க்களின்  அலுவலகங்களும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் அதிக எம்பிக்கள் அமரும் வகையில் மாற்றி வடிவமைக்கப்படவும் வாய்ப்புள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: