ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து இந்தியா கருத்து சர்வதேச நாடுகளுக்கு பாகிஸ்தான் அழைப்பு: தீவிர கவனம் செலுத்தும்படி வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்: `ஆக்கிரமிப்பு  காஷ்மீரை மீட்போம்’ என்று இந்தியா கூறியிருப்பதின் மூலம், இருநாடுகள் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்க  செய்ய வாய்ப்புள்ளது. எனவே, இப்பிரச்னையில் சர்வதேச நாடுகள் தீவிர கவனம் செலுத்த  வேண்டும்,’ என பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை  மத்திய அரசு நீக்கியதை சர்வதேச பிரச்னையாக மாற்ற பாகிஸ்தான் தொடர்ந்து  முயற்சித்து வருகிறது. இந்த சூழலில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில்,  `பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவின் ஓர் அங்கம். அதை நிச்சயம்  ஒருநாள் மீட்போம்’ என்று கூறினார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட பதில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஆக்கிரமிப்பு  காஷ்மீர் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஆத்திரமூட்டும் வகையில்  கூறிய பொறுப்பற்ற கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தியாவின் இந்த  சர்ச்சையான அறிக்கை இந்தியா - பாகிஸ்தான் இடையே  ஏற்கனவே பதற்றம் நீடிக்கும்  நிலையில், அப்பிராந்தியத்தின் அமைதிக்கு ஆபத்து உண்டாக்கும்.  

பாகிஸ்தான்  மீது பழி சுமத்துவதன் மூலம், காஷ்மீர் மக்களுக்கு எதிரான குற்றங்களில்  இருந்து சர்வதேச நாடுகளின் கவனத்தை இந்தியா திசை திருப்ப முடியாது. அமைதி  நிலவுவதையே பாகிஸ்தான் விரும்புகிறது. அதே சமயம் எதிர்  நடவடிக்கைளுக்கு  சரியான முறையில் பதிலடி கொடுக்கவும் தயாராக இருக்கிறது.போர்  குணத்தை விட்டொழித்து, சட்ட விரோத நடவடிக்கைகளை தவிர்த்து, காஷ்மீரில் மனித  உரிமைகளை குழி தோண்டி புதைக்கும் அத்துமீறலை நிறுத்தி விட்டு, சர்வதேச  சட்டத்தை மீறுவதைத் தவிர்த்து ஐநா பொது கவுன்சிலின்  தீர்மானங்களை முழுமையாக  பின்பற்றி காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண இந்தியா முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: