பேனல் மீதான வரி ரத்து எல்இடி டிவி விலை எவ்வளவு குறையும்?: ஜிஎஸ்டியும் குறைத்தால்தான் பலன்

புதுடெல்லி: டிவிக்களுக்கான எல்இடி பேனல் மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. எல்சிடி டிவி உற்பத்தியில், எல்சிடி பேனல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரிய டிவி தயாரிப்பாளர்கள் உட்பட பெரும்பாலானோர் இவற்றை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றனர். டிவி உற்பத்தி செலவில் இந்த  பேனல்களுக்கு மட்டும் 65 முதல் 70 சதவீதம் ஆகிறது. கடந்த 2017 ஜூன் 30ம் தேதி, எல்இடி பேனல் இறக்குமதிக்கு 5 சதவீத வரியை மத்திய அரசு விதித்தது.  இந்த வரியை குறைக்க வேண்டும் என நுகர்வோர் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கத்தினர் மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 15.6  அங்குலம் மற்றும் அதற்கு மேல் உள்ள எல்இடி பேனல்கள் மற்றும் எல்சிடி பேனல்கள்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த 5 சதவீத வரி நீக்கப்படுவதாகவும், இதுதவிர, டிவி தயாரிப்புக்கான பிலிம் சிப், பிரிண்டட் சர்க்கியூட் போர்டு மீதான  வரியும் நீக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சகம் அறிவித்தது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து எல்இடி உற்பத்தி துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், இதற்கு முன்பு இந்த வரி விதிப்பு தொடர்பாக குழப்பம் இருந்தது. இது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், டிவி விலையில் பெரிய மாற்றம் இருக்காது. சுமார்  3 சதவீதம் விலை குறைய வாய்ப்புகள் உள்ளன என்றார். இருப்பினும், தற்போது 32 அங்குலம் வரையிலான எல்இடி பேனல்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவீதமாகவும், இதற்கு மேல் உள்ள பேனல்களுக்கு 28 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.  தற்போது டிவி விற்பனையில் 32 அங்குல டிவிக்கள் பங்களிப்பு 75  சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைந்து விட்டது. எனவே மக்கள் தேவைக்கேற்ப பெரிய எல்இடி பேனல்களுக்கு ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு துறை வலியுறுத்தி  வருகிறது.

Related Stories: