நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சென்னை மாணவன்: விசாரணை நடத்த மருத்துவக்கல்வி இயக்ககம் உத்தரவு

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஆள் மாறாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் குறிப்பிட்ட இது தொடர்பாக விசாரணை நடத்தவும், போலீசில் வழக்கு பதிவு செய்யவும் மருத்துவக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா (18). இவரது தந்தை சென்னையில் டாக்டராக பணிபுரிவதாக கூறப்படுகிறது.  தமிழகத்தில் இரு முறை நீட் தேர்வு எழுதி உதித்சூர்யா தோல்வி அடைந்தார். இதனால் கடந்த முறை மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்று, தேனி மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்தார். உதித்சூர்யா வகுப்புகளுக்கு முறையாக சென்று வந்தார். இந்த நிலையில் அசோக்கிருஷ்ணன் என்பவர், தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு இ-மெயில் மூலம் ஒரு கடிதம்  அனுப்பியிருந்தார். அதில், உதித்சூர்யா மகாராஷ்டிராவில் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றதாகவும், அந்த ஹால் டிக்கெட்டையும், உதித்சூர்யாவின் போட்டோவையும் சோதனை செய்து பார்க்குமாறு கூறியிருந்தார்.

இதையடுத்து மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், மருத்துவக்கல்வி இயக்குனரகம் மூலம் மகாராஷ்டிராவில் உதித்சூர்யாவுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டை பெற்று பரிசோதித்தார். இதில் ஆள் மாறாட்டம் செய்து உதித்சூர்யா வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் மன அழுத்தத்தின் காரணமாக தன்னால் படிப்ைப தொடர முடியாது என்று கடந்த 16ம் தேதி டீனுக்கு கடிதம் அளித்து விட்டு மாயமாகி உள்ளார். இதுகுறித்து மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு, கூடுதல் மருத்துவக்கல்வி இயக்குனர் செல்வராஜன் கூறியதாவது: புகாருக்குள்ளான மருத்துவ மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் 385 மதிப்பெண் பெற்றுள்ளார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக குறிப்பிட்ட கமிட்டி அறிக்கை அளித்துள்ளது. குறிப்பிட்ட மாணவர் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றபோது பழைய புகைப்படத்தை கொண்டு வந்திருந்தார்.

அவர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 5 ஆண்டுகளுக்கு பின், பிளஸ்2 தேர்வு எழுதி 3 ஆண்டுகளுக்கு பின் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். முழு விசாரணை நடந்து முடிந்த பின்னரே ஆள்மாறாட்டம் நடந்தது உண்மையா என்பது தெரியவரும். குற்றம் உறுதியானால், மருத்துவம் படிக்க நிரந்தர தடை விதிக்கப்படும். சட்டரீதியாக இதுதொடர்பாக அனைத்து மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்களின் புகைப்படங்களை மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஆள்மாறாட்டம் நடப்பது எப்படி? குறிப்பிட்ட மாணவர் மகாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதியுள்ளார். அங்கு ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியிருக்க வாய்ப்புள்ளது. கவுன்சலிங்கில் ஆள்மாறாட்டத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஆனால் மருத்துவக்கல்வி இயக்கக அதிகாரிகள் கவுன்சலிங்கின்போது, கோட்டை விட்டார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

Related Stories: