×

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு: போளூர் அரசு பள்ளி ஆசிரியை விடியவிடிய உண்ணாவிரதம்: அரசுக்கு கண்ணீர் வேண்டுகோள் வீடியோ வைரல்

திருவண்ணாமலை: 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போளூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை விடிய, விடிய உண்ணாவிரதம் இருந்தார். அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி, அவர் கண்ணீர் விட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே ஜவ்வாதுமலை ஒன்றியம், அரசவெளி கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உண்டு, உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இடைநிலை ஆசிரியையாக மகாலட்சுமி(40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஆசிரியை மகாலட்சுமி, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்ற அரசு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கான அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று முன்தினம் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்பறைக்கு வந்தார்.

பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு பாடங்களை நடத்தினார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். ஆசிரியை உண்ணாவிரதம் இருப்பதையறிந்த மாணவ, மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதனர். சில மாணவர்கள் அவருடன் அமர்ந்து இருந்தனர். தொடர்ந்து நேற்று காலை மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று மகாலட்சுமி தனது உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்தார். மேலும், இதுதொடர்பாக ஆசிரியை மகாலட்சுமி நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகம் சமூக நீதிக்கான மண்.

இங்கு குழந்தைகளுக்கு எதிராக வன்முறைகள் நடப்பது வேதனை அளிக்கிறது. 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட வன்முறை. இதை எதிர்த்தும், நியாயம் கேட்கவும், அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தியும் உண்ணாவிரதம் இருந்தேன். குழந்தைகளின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார். மேலும், அந்த வீடியோவில் ஆசிரியை மகாலட்சுமி மற்றும் மாணவ, மாணவிகள், பொதுத்தேர்வு நடைமுறையை கைவிட வலியுறுத்தி கண்ணீர் விட்டபடி அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது, அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : 8th Class Elections Opposition ,Polur Government School Teacher Dies ,Polur Government School Teacher Dies 5th and 8th Class Elections Opposition , 5th, 8th Class General Elections, Polur Government School, Teacher, Fasting
× RELATED ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை...