விசாரணை அதிகாரிகள் ஆஜராகாவிட்டால் வாரன்ட்: போலீசாருக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

மதுரை: மதுரை நகர் காவல் எல்லையில் நடந்த ஒரு கொலை வழக்கிலும், மாவட்ட எல்லையில் நடந்த ஒரு கொலை வழக்கிலும் ஒரே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான இரு கொலை வழக்குகளும் தனித்தனி நீதிமன்றங்களில் நடந்துள்ளது. இதில், ஒரு வழக்கில் தண்டனையும், ஒரு வழக்கில் விடுவித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மனுக்கள் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: குற்றவியல் நடைமுறை சட்டப்படியான வழக்குகளில் விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்தோ, உறுதிபடுத்தியோ ஐகோர்ட்களில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதுபோன்ற வழக்குகளில் இன்ஸ்பெக்டர் அல்லது மேலதிகாரிகள் விசாரணை அதிகாரிகளாக உள்ளனர். இவர்கள், சம்பந்தப்பட்ட அப்பீல் மனுக்கள் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது, ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

ஆனால், சமீபகாலமாக அப்பீல் வழக்குகள் மீதான விசாரணையின்போது, விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வருவதில்லை. இதனால் சம்பந்தப்பட்ட வழக்குகளின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முடியவில்லை. விசாரணையும் பாதிக்கிறது. சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளையில் கிரிமினல் அப்பீல் வழக்குகள் விசாரணைக்கு வரும்போது சம்பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணை அதிகாரிகள் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு  நீதிமன்றம் வாரன்ட் பிறப்பிக்கும். இதை சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள் கவனத்தில் கொண்டு இந்த உத்தரவை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: