ஆந்திராவில் இருந்து விழுப்புரத்துக்கு டேங்கர் லாரியில் கடத்திய 1 கோடி எரிசாராயம் பறிமுதல்

ஆரணி:  ஆரணி அருகே 1 கோடி மதிப்புள்ள எரிசாராயம், டேங்கர் லாரி உள்ளிட்ட வாகனங்களை தமிழ்நாடு மதுவிலக்கு மத்திய குற்றப்புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதிக்கு ஆரணி வழியாக டேங்கர் லாரியில் எரிசாராயம் கடத்துவதாக தமிழ்நாடு மதுவிலக்கு மத்திய குற்றப்புலனாய்வு  போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், விழுப்புரம் கோட்டம், தம போலீசார் நள்ளிரவு ஒரு மணியளவில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த நெசவு கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது, டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்ட எரிசாராயத்தை, சரக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் கேன்களில் நிரப்பி கொண்டிருந்த 4 பேர் கும்பல், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து போலீசார், டேங்கர் லாரியை சோதனையிட்டதில் அதில் இருந்த 25 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை 500 கேன்களில் நிரப்பி, அதனை லாரி மூலம் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, டேங்கர் லாரி, சரக்கு லாரி, 3 லோடு ஆட்டோக்கள், 4 பைக்குகள் மற்றும் எரிசாராய கேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 1 கோடி.  பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம், டேங்கர் லாரி, சரக்கு லாரி, 3 லோடு ஆட்டோ மற்றும் 4 பைக்குகள், போளூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து ேவலூர், ஆற்காடு, ஆரணி வழியாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதிக்கு எரிசாராயத்தை கடத்தியது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட டேங்கர் லாரியில் கர்நாடக பதிவெண் இருந்தது. எனவே, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து எரிசாராயம் கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: