×

நிறுவன பதிவு ஆவணங்கள் குளறுபடி தொடர்பான வழக்கு அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி விடுதலை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: நிறுவன பதிவு தொடர்பான ஆவணங்களை முறையாக பராமரிக்காதது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அவரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி.  இவர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் இயங்கி வந்த சேரன் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக கடந்த 2004-2005ம் ஆண்டுகளில் இருந்தார். அப்போது அந்த நிறுவனத்தை ஆய்வு செய்வதற்காக, கம்பெனிகள் பதிவு துறையிலிருந்து அதிகாரிகள் கடந்த 2008ல் சென்றுள்ளனர். அப்போது அதிகாரிகள் கம்பெனி முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, கம்பெனி பதிவு செய்தது தொடர்பான ஆவணங்கள் எதையும் முறையாக பராமரிக்கவில்லை என்று அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, அதிகாரிகள், நிறுவனம் தொடர்பான உரிய ஆவணங்களை  நுங்கம்பாக்கத்தில் உள்ள கம்பெனிகள் பதிவாளரிடம் சமர்பிக்க அறிவுறுத்தினர். ஆனால் கே.சி.பழனிசாமி உரிய ஆவணங்களை பதிவாளரிடம் சமர்பிக்கவில்லை.
இதையடுத்து, கே.சி.பழனிசாமிக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் கம்பெனிகள் பதிவு துறை கடந்த 2012ல் வழக்கு தொடர்ந்தது.  இந்தநிலையில் பழனிசாமி முன்னாள் எம்.பி என்பதால் அவர் மீதான வழக்கு, கலெக்டர் அலுவகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கு நீதிபதி டி.லிங்கேஷ்வரன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட கே.சி.பழனிசாமி 2005 ஜனவரி 16ம் தேதி அந்த நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவர் தொடர்ந்து இயக்குநராக பதவி வகித்ததற்கான ஆவணங்களை கம்பெனிகள் பதிவு துறை தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, மனுதாரர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு காலதாமதமானது என்பதால் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கே.சி.பழனிசாமியை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறது என்று கூறப்பட்டிருந்தது.

Tags : KC Palanisamy ,DMK ,AIADMK ,KC Palanisamy Acquisition of Corruption Charges , Corporate Registration Documents, Former AIADMK MP KC Palanisamy, Independence, Chennai Special Court
× RELATED சொல்லிட்டாங்க...