×

நீதிமன்ற உத்தரவை மதிக்காதது அவமதிப்பதாகும் தடையை மீறி அதிமுக மாஜி எம்எல்ஏ ஆவின் தலைவராக செயல்படுகிறாரா? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி

மதுரை: மதுரை ஆவின் தலைவராக தடையை மீறி செயல்படுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை ஆவின் இயக்குநர்கள் பெரியகருப்பன், பழனியப்பன், சடையாண்டி, இந்திராணி, முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை ஆவின் இயக்குநர்களாக தேர்தல் மூலம் கடந்த 15.12.2018ல் தேர்வு செய்யப்பட்டோம். அப்போது மதுரை மற்றும் தேனி மாவட்டங்கள் இணைந்த ஆவினாக இருந்தது. இதன் இயக்குநர்களாக 17 பேர் இருந்தனர். இவர்கள் மூலம் ஆவின் தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஆக. 22ல் மதுரை ஆவினில் இருந்து தேனி மாவட்ட ஆவினை தனியாக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி 6 இயக்குநர்கள் தேனிக்கு சென்று விட்டனர். மீதமுள்ள 11 பேர் மட்டுமே மதுரை ஆவின் இயக்குநர்களாக உள்ளோம். இந்த இயக்குநர்களில் இருந்து ஒருவர் தான் தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும். மதுரை ஆவின் பணிகளை தொய்வின்றி மேற்கொள்வதற்காக செப். 21 வரை துணைத்தலைவர் தங்கராஜன் என்பவரை ெபாறுப்பு தலைவராக தேர்வு செய்தோம். ஆனால் எவ்வித முறையான தேர்தல் நடவடிக்கையுமின்றி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ  தமிழரசனை மதுரை ஆவின் தற்காலிக தலைவராக நியமனம் செய்து துணைப்பதிவாளர் மற்றும் பொதுமேலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

தமிழரசன் நியமனத்தை எதிர்த்த வழக்கில், மதுரை ஆவின் தலைவராக செயல்படக்கூடாது என ஐகோர்ட் கிளை ஏற்கனவே தடை விதித்துள்ளது. எனவே, மதுரை ஆவின் தலைவராக தமிழரசன் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்யவும், மதுரை ஆவின் தலைவரை முறைப்படி தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜராகி, ‘‘தமிழரசன் தற்போது ஆவின் தலைவருக்கான நடவடிக்கைகளில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறார். அரசால் வழங்கப்பட்ட காரையே பயன்படுத்தி வருகிறார். நீதிமன்ற தடையை அவர் மதிக்கவில்லை’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘நீதிமன்ற உத்தரவை மதிக்காவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் எனவே, நீதிமன்ற உத்தரவை மதித்து நடக்க வேண்டும். காரை பயன்படுத்தக்கூடாது என அவருக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அறிவுறுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை அக். 14க்கு தள்ளிவைத்தனர்.


Tags : MLA ,AIADMK ,Icort Madurai Branch , Court order, AIADMK MG MLA, AAV President, Icort Madurai Branch
× RELATED சிறுமி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி...