தஞ்சை மாவட்டத்தில் 1,000 ஏக்கரில் குறுவை பயிர் நீரில் மூழ்கியது

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் 1,000 ஏக்கர் வயல்களில் குறுவை நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது.  காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்து போனது. நடப்பாண்டு ஆழ்குழாய் கிணறு வசதியுள்ள விவசாயிகள் நிலத்தடி நீரை கொண்டு ஆங்காங்கே குறுவை சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை வேளையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இம்மழையால்  1,000 ஏக்கரில் நெய்பயிர்கள் அடியோடு வயலில் சாய்ந்து விட்டன. இதனால் நெல்மணிகள் அழுகும் அபாயம் எழுந்துள்ளது. விவசாயிகள், பயிர்களை நிமிர்த்தி கம்புகளில் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை அருகே கள்ளப்பெரம்பூர், தென்னங்குடி, ஆலக்குடி, சக்கரசாமந்தம், பூதலூர் போன்ற பகுதிகளில் சாய்ந்த பயிர்களை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். அறுவடை வயலில் தேங்கியுள்ள மழைநீரும் உடனடியாக வடியாமல் தேங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து விவசாயி அறிவழகன் கூறும்போது, வடிகால் வாய்க்கால்களை தூர்வாராததே வயலில் தேங்கியுள்ளதற்கு தண்ணீர் காரணம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் வடிகால்கள் மட்டுமின்றி நீர்வரத்து வாய்க்கால்களையும் சரியான முறையில் தூர்வாருவதில்லை.  எனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: