தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரம்

ஊட்டி: நீலகிரியில் ஆண்டுதோறும் இரண்டு சீசன் கடைபிடிக்கப்படுகிறது. மார்ச்-ஜூன் வரையில் முதல் சீசனாகவும், செப்டம்பர்-நவம்பர்  வரையில் 2வது சீசனாகவும் கடைபிடிக்கப்படுகிறது. முதல் சீசனில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படும். இரண்டாவது சீசனில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். கடந்த 1ம் தேதி முதல் இரண்டாம் சீசன் துவங்கி உள்ளது. இதற்காக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள தொட்டிகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  

டேலியா, டெல்பீனியம், இன்காமேரிகோல்டு, பிரஞ்சுமேரிகோல்டு, பேன்சி, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், ஆஸ்டர், பிரிமுலா, பால்சம், சைக்லமன், ஆர்கிட், ரனன்குலாஸ், அந்தூரியம், ஜெரோனியம் மலர்கள் உட்பட 85 வகையான 2.5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரம் தொட்டிகள் வரையில் மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மலர்கண்காட்சி சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஒரு மாதம் இருக்கும். சீசனுக்காக, செடிகளை கொண்டு பல்வேறு வடிவங்களில் மலர் அலங்காரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று துவக்கி வைத்தார்.

Related Stories: