திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு வாய்ப்பு: ஆந்திர அரசு அரசாணை வெளியீடு

திருமலை: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பட்டியலில் தமிழகத்தின் சார்பில் 4 பேருக்கு வாய்ப்பு வழங்கி ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற இந்துக்களின் புனித நகரமாக  உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலின் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் 28 உறுப்பினர்களுடன் கூடிய பட்டியலுக்கான அரசாணையை ஆந்திர  மாநில அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தின் சார்பில் 4 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இருந்து ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி, இந்தியா சிமென்ட் உரிமையாளர் சீனிவாசன்,  உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு,  டாக்டர் நிச்சிதா முத்தரப்பு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரசாந்தி, எம்எல்ஏக்கள் ரமணமூர்த்தி, மல்லிகார்ஜுனா, கொள்ளா பாபுராவ், பார்த்தசாரதி மற்றும்  நந்தல்ல சுப்பாராவ், ஆனந்தா, சிப்பகிரி பிரசாத் ராவ், ஆகிய 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் இருந்து ராமேஸ்வர ராவ், பார்த்தசாரதி, வெங்கடபாஸ்கர், மூரம்செட்டி ராமுலு, தாமோதர, சிவக்குமார், புட்டா பிரதாப் ஆகிய 7 பேருக்கும்,  கர்நாடக மாநிலத்தில் இருந்து ரமேஷ், சம்பத் ரவிநாராயணா, சுதா நாராயண மூர்த்தி ஆகிய 3 பேருக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜேஷ் சர்மா,   டெல்லியில் இருந்து சிவசங்கரன் என மொத்தம் 24 உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இதுதவிர ஆந்திர மாநில இந்து அறநிலை துறை செயலாளர், ஆணையாளர், தேவஸ்தான செயல் அலுவலர்,  திருப்பதி புறநகர் மேம்பாட்டு வளர்ச்சிக் குழு தலைவர் உட்பட மொத்தம் 28 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அறங்காவலர் குழு தலைவராக முதல்வர் ஜெகன்மோகனின் சித்தப்பா ஒய்.வி.சுப்பா ரெட்டி,  நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சந்திரபாபு ஆட்சியின்போது புட்டா சுதாகர் தலைமையில் இருந்த அறங்காவலர் குழு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கலைக்கப்பட்டு 3 மாதங்களாக அறங்காவலர் குழு நியமிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது 28 பேருடன் கூடிய அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களாக தேவஸ்தானத்தின் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான முடிவுகள் எடுக்கப்படாமல் இருந்த நிலையில் விரைவில் புதிய அறங்காவலர் குழு பல்வேறு முடிவுகள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிபாரிசு கடிதம் இல்லாமல் விஐபி டிக்கெட்டை பக்தர்கள் பெற ஏற்பாடு செய்வது உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: