மத்திய அமைச்சரவை ஒப்புதல் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்: இ-சிகரெட்டுக்கு அதிரடி தடை

புதுடெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதே போல், நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்ததும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இரு அமைச்சர்களும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது பேசிய ஜவடேகர், ‘‘ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ரயில்வே உற்பத்தி திறனுக்காக ஊழியர்களுக்கு அரசு வழங்கும் வெகுமதி. இந்த உற்பத்தி போனஸ், பாஜ ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

அரசின் இந்த நடவடிக்கை மூலம் 11 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். இதன் மூலம், அரசுக்கு ரூ.2000 கோடி செலவு ஏற்படும்,’’ என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.  அவர் கூறியதாவது:இந்தியாவில் இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, சேகரித்து வைப்பது, வினியோகம், மார்கெட்டிங் மற்றும் அது தொடர்பான விளம்பரம் செய்ய தடை முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இ-சிகரெட் தயாரிக்கப்படுவது இல்லை என்றாலும், 400 பிராண்டுகளின் இ-சிகரெட்டுகள், 150 விதமான நறுமணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிகரெட்டுகள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காதவை அல்ல. இதில் உள்ள ரசாயனங்கள் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையே.

எனவே, இளைஞர்கள் நலன் கருதி இந்த தடை நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவில் மக்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட வேண்டும் என்பதற்காக இ-சிகரெட் கொண்டு வரப்பட்டது. ஆனால், அரசின் எண்ணம் நிறைவேறவில்லை. இ-சிகரெட்டை வெறும் ஸ்டைலுக்காக பலர் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம், யாரும் அங்கு சிகரெட் பழக்கத்திலிருந்து மீளவில்லை என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதை அடிப்படையாக வைத்தே, இ-சிகரெட்டுக்கு தடை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக அவசர சட்டம் பிறப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த விவகாரம் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இ-சிகெரெட் பயன்படுத்துபவர்கள் உயிரிழக்க நேரிட்டதால், அமெரிக்காவில் பல மாகாணங்களில் அதற்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: