×

தாமிரபரணி ஆற்றில் புதைந்துள்ள மன்னர் காலத்து கட்டிடம்: பள்ளி மாணவர்கள் திரளாக வந்து பார்த்து வியப்பு

ஆறுமுகநேரி: தாமிரபரணி ஆற்றில் புதைந்துள்ள மன்னர் காலத்து கட்டிடங்களை பள்ளி மாணவர்கள் திரளாக வந்து பார்த்து வியந்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர்-முக்காணி தாமிரபரணி ஆற்றின் பாலத்தின் மேற்கு தடுப்பணையால் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. அதில் ஒரு வாரத்திற்கு முன் பழை கட்டிடங்களின் சிதைந்த பாகங்கள் வெளியில் தெரிந்தன. இதுபற்றிய விரிவான செய்தியும் படமும் வெளியானது. இதைத்தொடர்ந்து அந்த இடத்தை நெல்லை பல்கலைகழக உயிரியல் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் சுதாகர்,

சிவகளையைச்சேர்ந்த திருவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரி வரலாற்று பேராசிரியரும் ஆராய்ச்சி மாணவருமான மாணிக்கம், ஆராய்ச்சியாளர் ஆறுமுகநேரி தவசிமுத்து, சமூக ஆர்வலர் ஆத்தூர் நெடுஞ்செழிய பாண்டியன் மற்றும் பலவிதமான குழுவினர் அந்த இடத்தை ஆய்வு செய்து சென்றனர். அப்போது அங்கு புதைந்து கிடந்த அன்னம், யாழி, மனித வால் குரங்கு, பெண் ஓவிய சிற்பங்கள், படகுகள் நிறுத்த பயன்படும் கல்லால் செய்யப்பட்ட ராட்சத நங்கூரம் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே இங்குள்ள கட்டிடங்கள் கொற்கை மன்னன் காலத்து கட்டிடங்களாகவும் அதன்பிறகு வந்த நாயக்கர் மன்னர்களால் அவை புதுப்பிக்கப்பட்டிருக்க கூடும் என்றும்,

கடைசியாக இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியர்கள் அதை நவீனப்படுத்தியிருக்க கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. தொடர்ந்து அங்கு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுள்ளன. பழைமை வாய்ந்த கட்டிடங்கள் இருப்பதால் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானபேர் வந்து பார்த்து செல்கிறார்கள். குறிப்பாக மாணவ, மாணவிகளும் தினமும் வருகிறார்கள். நேற்று ஆத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பள்ளி சீருடையுடன் அங்கு சென்று அங்குள்ள கட்டிட உதிரி பாகங்களை கண்டு வியந்தனர். அவர்களை அழைத்துச்சென்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அந்த கட்டிடங்கள் பற்றிய குறிப்புகளை எடுத்து கூறினர்.

அந்த பகுதி ஒரு சுற்றுலா தலம் போல் ஆகிவிட்டது. தற்போது பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அந்த தண்ணீர் திருவைகுண்டம் அணையை தாண்டி வர வாய்ப்பில்லை. வடகால், தென்காலுக்கு திறந்து விடப்படும் என்று தெரிகிறது. இதனால் பழைமை வாய்ந்த கட்டிடம் உள்ள இடத்தை தொல்லியல் துறையினர் காலம் தாழ்த்தாது ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.

Tags : King ,Tamraparani River: School ,Buried in Monument: School , Tamraparani, the monument of the monarch
× RELATED கிரைஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா