2வது சீசனையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்கார பணி துவங்கியது

ஊட்டி: 2வது சீசனையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்கார பணிகள் இன்று துவங்கியது. 10 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரியில் ஆண்டுதோறும் இரு சீசன் கடைபிடிக்கப்படுகிறது. மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் துவங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை முதல் சீசனாகவும், செப்டம்பர் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை இரண்டாவது சீசனாகவும் கடை பிடிக்கப்படுகிறது. முதல் சீசனில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாள் தோறும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக காணப்படும்.

மேலும், இந்த சீசனின் போது வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளை விட தமிழகத்தில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். இரண்டாவது சீசனில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். கடந்த 1ம் தேதி முதல் இரண்டாம் சீசன் துவங்கியுள்ளது. இந்த நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர்கள் செடிகளில், அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்த நிலையில், 15ம் தேதி மலர் அலங்கார பணிகள் மேற்க்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சில காரணங்களால் மலர் அலங்காரம் மேற்க்கொள்ளப்படும் நாள் தள்ளி போன நிலையில், இன்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. டேலியா, டெல்பீனியம், இன்காமேரிகோல்டு, பிரஞ்சுமேரிகோல்டு, பேன்சி, பெகோனியா, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், ஆஸ்டர், பிரிமுலா, பால்சம், சைக்லமன் ஆகிய வகைகளை அடங்கிய 10 ஆயிரம் தொட்டிகள் மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மலர் கண்காட்சி சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஒரு மாதம் இருக்கும். பொதுவாக இரண்டாம் சீசன் போது, தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை.

இந்த முறை தாவரவியல் பூங்காவில் உள்ள மாடங்களில் மட்டுமின்றி, பெர்ன் அவுஸ் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளபட்டுள்ளது. அலங்கார செடிகளை கொண்டு பல்வேறு வடிவங்களில் அலங்காரங்களும் மற்றும் மலர் தொட்டிகளை கொண்டும் மலர் அலங்காரங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அலங்கார பணிகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், பூங்கா உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: