நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர் தேர்ச்சி பெற்ற விவகாரம்: உயர்மட்ட குழு விசாரணைக்கு மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவு

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர் தேர்ச்சி பெற்ற விவகாரம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட குழுவை அமைத்து மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆள்மாறாட்டம்

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மொத்தம் 110 இடங்கள் இருந்தன. அதில் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் 15 மாணவர்களும், தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டில் 85 மாணவர்களுக்கான இடங்களுக்கு சேர்க்கை நடைபெற்றது. இதில் சென்னையை சேர்ந்த ஒரு மாணவர் மாநில அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில், தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ஒரு மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சிப் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு, மாணவர் ஒருவர் ரகசியமாக இமெயில் அனுப்பியுள்ளார். அதில், மருத்துவக்கல்லூரி முதலாமாண்டில் பயிலும் ஒரு மாணவர் நீட் தேர்வு எழுதாமலே ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்துள்ளார். நீட் தேர்வு எழுதியது ஒருவர், தற்போது கல்லூரியில் சேர்ந்திருப்பது வேறோரு மாணவர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகார் வந்துள்ளது.

காவல்நிலையத்தில் புகார்

இதையடுத்து புகார் அடிப்படையில், மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மிக ரகசியமாக யார் அந்த மாணவர், எப்படி நீட் தேர்வு எழுதாமலே கல்லூரியில் சேர்ந்தார் என்பது பற்றி ரகசிய விசாரணை நடத்தி வந்துள்ளார். நீட் தேர்வு எழுத பயன்படுத்தப்பட்ட ஹால்டிக்கெட்டில் உள்ள படத்தையும், மாணவரின் அசல் தோற்றத்தையும் பார்க்கும் போது அதில் நிறைய வித்தியாசங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஆள்மாறாட்டம் செய்த மாணவரது பெற்றோர்களிடத்திலும் முதல்வர் ராஜேந்திரன் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், விசாரணை தொடர்பான அறிக்கையை முதல்வர் வெளியிடவில்லை. மாறாக, மாநில சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும், மருத்துவக்கல்லூரி தேர்வாணையத்துக்கும் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

உயர்மட்ட குழு விசாரணை

இந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர் தேர்ச்சி பெற்ற விவகாரம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட குழுவை அமைத்து மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு, தேனி மருத்துவக் கல்லூரியில் சென்னையை சேர்ந்த உதித்சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து சேர்நததாக புகார் வந்துள்ளது. வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்களை புகார்தாரர் தந்துள்ளார், என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் கூறியதாவது, புகார்தாரர் தந்த புகைப்படங்களை போலீசிடம் அளித்துள்ளோம். இதுகுறித்து காவல்துறை மூலம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீஸ் விசாரணை அறிக்கை கிடைத்ததும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து, 4 பேராசிரியர்கள் கொண்ட உயர்மட்ட குழுவும் விசாரணை நடத்தும். விசாரணையின் முடிவில் ஆள்மாறாட்டம் உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாணவர்களின் விவரங்களும் சரிபார்க்கப்படும், அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். இதற்கிடையில், மன உளைச்சல் காரணமாக தாம் படிப்பை தொடர இயலாது என மாணவர் உதித்சூர்யா கடிதம் அளித்துள்ளார், என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பேசிய மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன், அடுத்த ஆண்டு முதல் கைரேகை வாங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Related Stories: