×

எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம்: இந்தி திணிப்புக்கு எதிராக ப.சிதம்பரம் ட்வீட்

புதுடெல்லி: எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று இந்தி திணிப்புக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் தமது குடும்பத்தார் மூலமாக இந்தி திணிப்புக்கு எதிரான தமது கருத்தை ஆழமாக பதிவு செய்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தி மொழியால் மட்டுமே நாட்டு மக்களை ஒன்றிணைக்க முடியும் என்ற ஆபத்தான கருத்து உலா வந்துகொண்டிருக்கிறது. தமிழ் மக்களும், அதேபோல் மற்ற மொழிகளைப் பேசும் மக்களும் இந்தியை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

எல்லா மொழிகளின் வளர்ச்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம், ஆனால் இந்தி மட்டுமே இந்த நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் என்ற கருத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்தி திணிப்புக்கு எதிராக 20.09.2019 அன்று திமுக சார்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில், காங்கிரசார் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே்.எஸ் அழகிரியை கேட்டுக்கொள்கிறேன், என்று ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது.

தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம். இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும், எனவும் அவர் தமது பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவில் பல மொழிகள் உள்ளன.

ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும், என கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த இந்தி திணிப்பு குறித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் கருத்திற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : P. Chidambaram , Tamil , Hindi imposition, P. Chidambaram, Congress, DMK
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...