மானாமதுரையில் முன்விரோதம் காரணமாக தங்கமணி என்பவரை வெட்ட முயன்ற ரவுடி கும்பல் மீது வங்கி காவலர் துப்பாக்கி சூடு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ரவுடி மீது துப்பாக்கிசூடு சம்பவம் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரையில் தங்கமணி என்பவரை விரட்டி வெட்டிய ரவுடி கும்பலைச் சேர்ந்தவர் மீது வங்கி காவலாளி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். கனரா வங்கி அருகே தங்கமணியை 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியபோது வங்கி காவலாளி துப்பாக்கியால் சுட்டுள்ளார். மானாமதுரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளராக இருந்தவர் சரவணன். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்கமணி உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் அதில் தங்கமணி  தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தங்கமணி நீதிமன்ற விசாரணையில் இருந்து ஜாமினில் வழியில் வந்தார். இந்த நிலையில், மானாமதுரை மரக்கடை வீதியில் தங்கமணி இன்று நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் ஓட ஓட வெட்டியுள்ளனர்.

அப்போது, உயிர் தப்பிப்பதற்காக தங்கமணி அருகில் இருந்த கனரா வங்கிக்குள் ஓடியுள்ளார். மேலும் அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேரும் வங்கிக்குள் நுழைந்து அவரை வெட்ட முயன்றனர். அப்போது வங்கி காவலாளி கையில் வைத்திருந்த துப்பாக்கியால் 4 பேரை நோக்கி சுட்டுள்ளார். இதில் தமிழ்ச்செல்வன் என்பவர் காலில் குண்டு பாய்ந்ததால் கீழே விழுந்தார். துப்பாக்கிசூட்டிற்கு பயந்து மற்ற 3 பேரும் ஓடி விட்டனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த 2 பேரையும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அமமுக ஒன்றிய செயலாளர் கொலைக்கு பழிக்கு பலி வாங்கவே இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தங்கமணியின் உயிரை காப்பாற்றுவதற்காக துப்பாக்கிசூடு நடத்திய காவலாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: