தேர்வு வினாத்தாள்களை லீக் செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்குநர் எச்சரிக்கை

சென்னை: தேர்வு வினாத்தாள்களை லீக் செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அரசு பொதுத்தேர்வு எழுதக்கூடிய 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கடந்த 12ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வுகள் வரும் 23ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், ஷேர் சாட் எனப்படும் தொலைபேசி செயலியில் 11ம் வகுப்புகளுக்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாகவே வெளியானதாக தகவல் பரவியது.

11ம் வகுப்பு மாணவர்களுக்கான வணிகவியல் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், இந்த வினாத்தாள் கடந்த ஞாயிற்றுக்கிழமையே இந்த செயலியில் பதிவிடப்பட்டதாகவும், அதேபோல செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கணிப்பொறி பயன்பாட்டியல் தேர்வுக்கான வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாகவும் தகவல் பரவியது. குறிப்பாக ஷேர் சாட் ஆப்பில் உள்ள கல்வி மற்றும் தொழில்நுட்பம் என்ற பகுதியை ஓபன் செய்து பார்த்தால் அதில் தேர்வு வினாத்தாள் இருந்தது அதிர்ச்சியடைய வைத்தது.  ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் இந்தத் தகவல் காட்டுத் தீ போல பரவியது. ஆனால் அது முன்கூட்டியே நடைபெற்ற வினாத்தாள் தான் மொபைலில் வெளியாகியுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார். இந்நிலையில், தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்குநர் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அவர் சுற்றறிகை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இனி நடக்கவிருக்கும் தேர்வுகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்தி முடிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இதுசார்ந்த புகார்கள் ஏதும் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, பொதுத்தேர்வுகளை போல், இனி வரும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கும் வினாத்தாள்களை அச்சிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரையில், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கான விளாத்தாள்கள் சிடி மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: