×

சேக்கிபட்டியில் பாம்புகள் கூடாரமான அரசு மருத்துவமனை

மேலூர்: மேலூர் அருகே அரசு மருத்துவமனை கட்டிடம் சேதமடைந்த நிலையில் பாம்புகளின் கூடாரமாக மாறியுள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர். மேலூர் அருகில் உள்ள சேக்கிபட்டியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனை அமைக்கப்பட்டது. சேக்கிபட்டி, குன்னாரம்பட்டி, கம்பூர், பட்டூர், கேசம்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இந்த மருத்துவமனை ஒரு வரப்பிரசாதமாக அப்போது அமைந்தது. இங்கு ஆண்டுக்கு 200க்கும் மேற்பட்ட பிரசவங்கள் அப்போது நடைபெற்றது. 2 டாக்டர்கள் 24 மணி நேரமும் சிகிச்சை அளித்த இந்த மருத்துவமனையில் தற்போதைய நிலை மிக பரிதாபமாக உள்ளது. டாக்டர் தங்குவதற்காக மருத்துவமனை வளாகத்தில் இருந்த குடியிருப்பு இடிந்து பயனற்ற நிலைக்கு சென்றுவிட்டது. தற்போது இங்கு எந்த டாக்டரும் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது இல்லை.

ஒரே ஒரு டாக்டர் மட்டும் அதுவும் மதியம் வரை மட்டுமே தற்போது பணிக்கு வந்து செல்கிறார். மருத்துவமனையின் பல பகுதிகளில் மேற்கூரை பெயர்ந்து அவ்வப்போது விழுகிறது. ஜன்னல்கள் உடைந்து பரிதாபமாக காட்சி அளிக்கின்றன. மருத்துவமனை வளாகம் முழுவதும் புதர்மண்டி காணப்படுகிறது. காம்பவுண்ட் சுவர் இல்லாததால் பாம்புகள் மருத்துவமனைக்குள் படையெடுத்து வருகின்றன. இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் புகார் அளிக்கப்பட்டது. மருத்துவமனை பழுதுகளை நீக்க ரூ.7.60 லட்சம் நிதி ஒதுக்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஓராண்டை கடந்தும் இதுவரை எந்த மராமத்து பணிகளும் நடக்கவில்லை. இவ்வளவு பிரச்சனைகள் போதாது என தற்போது மின்தடையும் இங்கு சேர்ந்து கொண்டுள்ளது. சிறிய மழைக்கே மருத்துவமனையில் மின்சாரம் தடைபடும் நிலை உள்ளது. இதனால் இங்கு பிரசவத்திற்கு வரும் பெண்களை மேலூர் மற்றும் கருங்காலக்குடிக்கு திருப்பி அனுப்புகின்றனர்.

உடனடியாக மருத்துவமனைக்கு போதிய நிதி ஆதாரத்தை ஒதுக்கி மீண்டும் தரமாக செயல்பட மருத்துவ நலப்பணிகள் இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையேல் அப்பகுதியில் அனைத்து கிராம மக்களும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

Tags : Government hospital ,Sekipatti , Sekipatti, Government Hospital
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்