நெல்லை அருகே இரவில் காரில் வந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை துறையூர் கிராம மக்கள் முற்றுகை

நெல்லை: நெல்லை அருகே நேற்றிரவு காரில் வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்தவர் கண்ணபிரான் (36). கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கடலூர் மத்திய சிறையில் இருந்துவந்த இவர் நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து அவரும், அவரது ஆதரவாளர்களும் இரு கார்களில் புறப்பட்டு நெல்லைக்கு வந்துகொண்டிருந்தனர். நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விலக்கு அருகே வந்த போது அப்பகுதியில் ரோந்துசென்ற எஸ்ஐ இசக்கிராஜா தலைமையிலான போலீசார் இவர்களது காரை தடுத்துநிறுத்தி சோதனையிட்டனர்.

பின்னர் அங்கிருந்து கார்களில் புறப்பட்ட இவர்களுக்கு நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அடுத்த துறையூர் விலக்கு பகுதியில் ஆதரவாளர்களும், கிராம மக்களும் வரவேற்பு அளித்தனர். அதேவேளையில் கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் வந்துகொண்டிருந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை தடுத்துநிறுத்தி முற்றுகையிட்டனர். இதையடுத்து காரை விட்டு இறங்கிய அமைச்சரிடம், கண்ணபிரானின் ஆதரவாளர்களும், அப்பகுதி மக்களும் கோவில்பட்டியில் போலீசார் வேண்டுமென்றே கண்ணபிரானின் காரை சோதனையிட்டதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். அதன்பிறகே மக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இருப்பினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாளை தாலுகா இன்ஸ்பெக்டர் ரகுபதிராஜா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: