×

காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நோயாளிகளை புறக்கணிக்கும் பணியாளர்கள்

காரைக்குடி: காரைக்குடி அரசு மருத்துவமனையில் அடிப்பட்டு ஆபத்தான நிலையில் செல்பவர்களுக்கு தையல் மற்றும் கட்டுப்போடாமல் அலட்சியமாக செயல்படுவதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். காரைக்குடி ரயில்வே பீடர்ரோடு மற்றும் என்ஜிஜிஓ காலனி பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன. என்ஜிஜிஓ காலனி பகுதியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, ஆபரேஷன் தியேட்டர், பிரசவ வார்டு, அரசின் இலவச காப்பீட்டு திட்ட பிரிவு ஆகியவை செயல்படுகின்றன. இங்கு காரைக்குடி, சூரக்குடி, கழனிவாசல், ஓ.சிறுவயல், உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் புறநோயாளிகளாக 400க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். பல்வேறு சிகிச்சைகளுக்காக உள்நோயாளிகளாக 100க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் கட்டிட பணியாளர் அய்யாதுரை பணியில் இருந்த போது விரலின் நுனிபகுதி துண்டான நிலையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த பணியாளர்கள் முறையாக கட்டுப்போடாமல் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். பின்னர் தலைமை மருத்துவரிடம் புகார் தெரிவித்த பின்னர் பணியில் இருந்த டாக்டர் பரிசோதனை செய்து உரிய சிகிக்சை அளித்துள்ளார். இதுபோல் அடிபட்டு அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் இஸ்மாயில் கூறுகையில், ‘‘அடிபட்டு அவசர சிகிச்சைக்கு செல்பவர்களுக்கு டி.டி ஊசி கூட போடுவது இல்லை. கட்டிட தொழிலாளியான அய்யாதுரை கைவிரல் துண்டிக்கப்பட்டு சிகிச்சைக்கு சென்ற போது முறையாக கட்டுபோடாமல் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இதனால் ரத்தம் நிற்காமல் வந்துகொண்டே இருந்தது. மீண்டும் மருத்துவமனைக்கு சென்ற போது அங்கிருந்த செவிலியர்கள் அரட்டை அடித்துக்கொண்டு எங்களை கண்டுகொள்ளவே இல்லை. பின்னர் நாங்கள் தலைமை மருத்துவரிடம் புகார் அளித்தவுடன் பணியில் இருந்த டாக்டர் பரிசோதனை செய்து மூன்றாவது முறையாக கட்டுப் போட்டார். இதுபோல பணியாளர்கள் அலட்சியமாக செயல்படுதாக தொடர் புகார் வருகிறது. தவிர ஒப்பந்த பணியில் உள்ள பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதாகவும் புகார் வருகிறது’’ என்றார்.

தலைமை மருத்துவர் தர்மார் கூறுகையில், ‘அவசர சிகிச்சைக்கு என இரண்டு பேர் இன்சார்ஜ் போடப்பட்டுள்ளனர். ஒப்பந்த பணியாளர்கள் சிகிச்சை அளித்து இருக்க வாய்ப்பில்லை. பணியாளர்கள் அலட்சியமாக செயல்பட்ட குறித்தும், நர்ஸ் தவிர வேறு நபர்கள் சிகிச்சை அளித்தது குறித்து நோயாளிகள் புகார் அளித்தால் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Karaikudi ,Karaikudi Government Hospital , Karaikudi, Government Hospital
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...