சேலத்தில் உள்ள காலி மனைகளை சுத்தம் செய்ய அதிரடி உத்தரவு: தவறும் பட்சத்தில் மாநகராட்சிக்கு சொந்தமாக்கப்படும் என அறிவிப்பு

சேலம்: சேலத்தில் காலி மனைகளை சுத்தம் செய்யாவிடில் மாநகராட்சியே சுத்தப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காலம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், நோய் தோற்று உள்ளிட்டவை ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை சேலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. அதேபோல, நகர்ப்புறங்களில் சுகாதார பணிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமார் 750 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் நேரடி ஆய்வுக்கு செல்லும் பகுதிகளில் அமைந்துள்ள காலி வீட்டுமனைகளில் உள்ள குப்பைகள், முட்புதர்களை அகற்றி நோய் தோற்று ஏற்படாமல் இருப்பதற்கு சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முறை அறிவுறுத்தப்பட்டது.

இருப்பினும், அதற்கு பொதுமக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் தற்போது இந்த முடிவை நிர்வாகம் எடுத்துள்ளது. அதன்படி, மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: காலி வீட்டு மனைகளில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், முட்புதர்களை  உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் அந்த பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு மாநகராட்சி ஒரு வார கால் அவகாசம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை தவறும் பட்சத்தில், மாநகராட்சி நிர்வாகமே காலி மனைகளை தூய்மைப்படுத்தி அதில் பூங்காக்கள் மற்றும் சமுதாய கூடம் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் என அறிவித்துள்ளது. மேலும், நோய் தோற்று ஏற்படாமல் இருக்க மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Related Stories: