ரூ.3 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய ஆற்றுப்பாலம் தண்ணீரில் மூழ்கியது: ஆபத்தான பாதையில் செல்லும் மாணவர்கள்

நாகை: நாகை அருகே ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் பள்ளி மாணவர்கள் ஆற்றைக் கடக்க 10 அடி உயரம் கொண்ட சட்ரஸ் மீது ஆபத்தான நிலையில் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நாகை அருகே திருமருகல் அடுத்துள்ள துறையூர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தெற்கு புத்தாரில் அமைக்கப்பட்டு இருந்த பாலம் மிகவும் பழுதடைந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடை பகுதியை நோக்கி வருகிறது. அப்பகுதியில் கட்டுமானம் செய்ய தொடங்கிய பாலம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆற்று தண்ணீரில் மூழ்கியது. இதனால் பாலத்தின் கம்பிகள் மட்டுமே வெளியில் தெரிகிறது. கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு மணல், கம்பி, ஜல்லி உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான கட்டுமான பொருட்கள் தண்ணீரில் மூழ்கி தேங்கி கிடக்கின்றது.

இந்த நிலையில் ஏற்கனவே இருந்த பாலம் இடிக்கப்பட்டு விட்டதால் ஆற்றை கடப்பதற்கு வேறு வழியில்லாத காரணத்தால் அருகாமையில் உள்ள 10 உயரம் கொண்ட சட்ரஸ் மீது ஏறி பொதுமக்கள் வர வேண்டிய நிலை உள்ளது. அதே போல் பள்ளிக்கு செல்லும் செல்லும் மாணவ, மாணவிகளும் ஆபத்தை உணராமல் 10 அடி உயரம் கொண்ட சட்ரஸ் மீது ஏறியே செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என எல்லோரும் இந்த ஆபத்தான நிலையிலேயே பயணம் செய்ய வேண்டியது உள்ளது. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் போக்குவரத்து துண்டித்த இந்த பாலத்தை கடப்பதற்கு அவதியடைந்து வருகின்றனர். பாலம் ஆற்றில் மூழ்கிய காரணத்தால் ஆபத்தான நிலையில் சட்ரஸ் மீது ஏறி பள்ளிக்கு செல்ல வேண்டியதாக இருப்பதாக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால், தாமதமாக பணிகள் தொடங்கிய காரணத்தால் பாலம் ஆற்றில் மூழ்கி விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். பாலம் சீர் செய்யப்படும் வரை ஆற்றை கடக்க மூங்கில் கொண்டு தடுப்புகளை அமைத்தால் அதை பிடித்து கொண்டு செல்ல முடியும். இந்த அவல நிலைக்கு தள்ளிய ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பயன்பெறும் வகையில் தற்காலிக மரப்பாலம் கட்டிகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: