அதிமுக அரசால் புறக்கணிப்பு: வீட்டை காலி செய்யும் சமத்துவபுர மக்கள்

பரமக்குடி: திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காரணத்தால், அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காத அதிமுக அரசால், சமத்துவபுரங்களில் வசிக்கும் மக்கள் வீட்டை காலி செய்து வெளியேறி வருகின்றனர். இதனால் பல கோடிகளில் ஏழைகளுக்காக கட்டப்பட்ட சமத்துவபுரங்கள் வீடுகள் பயனில்லாமல் சேதமடைந்து காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ சமத்துவபுரம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அனைத்து மாவட்டங்களில் ஒன்றியங்கள் வாரியாக 100 வீடுகளுடன் சமத்துவபுரங்கள் கட்டப்பட்டது. அடிப்படை வசதியான குடிநீர், தெருவிளக்கு, சிறுவர் பூங்கா, சமுதாய கூடம் என அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்த சமத்துவபுரங்கள், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்காமல் விட்டு விட்டனர். இதனால் முற்றலும் சேதமடைந்து உயிர் பலி வாங்க காத்திருப்பதால், பயனாளிகள் வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு சென்று விட்டனர். ஒரு சிலர் வாடகைக்கு விட்டு விட்டு வெளியேறி விட்டனர். கட்டிடங்கள், தண்ணீர் தொட்டி உள்ளிட்ட எந்த பராமரிப்பு பணிகளையும் செய்ய வில்லை. அதைபோல், மக்களின் குடிநீர் போன்ற எந்த பிரச்னைகளையும் சரி செய்ய முன்வரவில்லை. இங்கு குடியிருப்பவர்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் சமத்துவபுரம், பரமக்குடி ஒன்றியத்தில் உள்ள பாம்பூரில் உள்ளது. இங்குள்ள சிறுவர் பூங்கா பயன்பாடின்றி விளையாட்டு உபகரணங்கள் உடைந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. சமுதாயக்கூடம், நியாய விலைகடை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. சமத்துவபுர முன்பகுதியில் நிறுவப்பட்டுள்ள பெரியார், திருவள்ளுவர் சிலைகள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. குடிக்க தண்ணீர் இல்லாமல் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள சாம்பக்குளம் வரை நடந்து சென்று தண்ணீர் கொண்டு வருகின்றனர். தோளூர் கிராமத்தில் கொண்டுவரப்பட்ட சமத்துவபுரத்தில், மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு தண்ணீர் இல்லாமல் உள்ளது. குடிநீருக்கு அருகில் உள்ள பெருமாள்கோவிலுக்கு சென்று பிடிக்க வேண்டும். ரேசன் கடை கடை திறக்கப்படாமல் அப்படியே உள்ளது. பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கஞ்சியனேந்தல் கிராமத்தில் ரேசன் பொருள்கள் வாங்கி வருகிறார்கள். சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு உபகரணங்கள் இருந்த நிலையில், தற்போது சிறுவர் பூங்காவில் இருந்த உபகரணங்கள் திருடுபோன நிலையில் பூங்கா இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. சமத்துவபுரத்தை சுற்றிலும் முட்செடிகளும், கருவேல மரங்களால் புதர்களும் மண்டி கிடக்கிறது.

நயினார்கோவில் அருகே உள்ள சமத்துவபுரத்தில் குடிநீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. சமத்துவபுரத்தில் அன்னியர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு இல்லாத சூல்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, வாறுகால்வாய், சுகாதாரமற்று உள்ளதால் 100 வீடுகளில் 30 வீடுகளில் குடியிருந்தவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டனர். சிலர் உள்வாடகைக்கு விட்டு விட்டு சென்று விட்டனர். சிறுவர் பூங்காவில் கருவேல மாங்கள் வளர்ந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதனால் தினமும் வீடுகளை நோக்கி விஷபூச்சிகள் படையெடுத்து வருகிறது. சத்திரக்குடி சமத்துபுரத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் முறையாக பராமரிப்பு செய்யாமல் விட்டு விட்டதால், சேதமடைந்து காணப்படுகிறது. சிறுவர் பூங்காவில் கருவேலம் மரங்கள் உள்ளதால், குழந்தைகள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. குடிநீர் இல்லாமல் சாலைகளில் ஓடும் தண்ணீரை பிடித்து தாகத்தை தீர்த்து வருகின்றன. சுற்றுச்சுவர் இல்லாததால் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சமத்துவபுரங்களிலும் வாறுகால்கள் சேதமடைந்துள்ளது. ரோடு வசதி, சுடுகாடு வசதிகள் இல்லை. தெருவிளக்கு, சிறுவர் பூங்கா உள்ளிட்டவைகளை முறையாக பராமரிப்பு இல்லாமல் விட்டு விட்டதால், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் குடியிருப்போர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து தோளூர் ராமசந்திரன் கூறுகையில், ‘‘தோளூர் சமத்துவபுரத்தில் தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும் குளியுமாக படுமோசமாக உள்ளது. தாகத்தை தீர்க்க குடிநீர் இல்லை. சுற்றிலும் கருவேல மரங்கள், தெருவிளக்கு இல்லை. இதனால் சமத்துவபுர மக்கள் வீட்டை காலி செய்து விட்டனர். ரேசன் கடை இருந்தும் இயங்காததால் அருகில் உள்ள கஞ்சியனேந்தல் கிராமத்திற்கு சென்று பொருள்களை வாங்கி வருகின்றோம்’ என்றார்.

Related Stories: