×

அயோத்தி வழக்கின் விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு: நவம்பரில் தீர்ப்பு வழங்க வாய்ப்பு

புதுடெல்லி: அயோத்தி வழக்கின் விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் கேடு விதித்துள்ளது. அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் 3 தரப்பு வாதங்களையும் அக்டோபர் 18ம் தேதிக்குள் முடிக்க நீதிமன்றம் கேடு விதித்துள்ளது. அதேபோல சனிக்கிழமைகளிலும் அயோத்தி வழக்கு விசாரணையை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நில உரிமை தொடர்பாக சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லாலா இடையே வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நவம்பரில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வுபெறும் முன் அயோத்தி நில வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமயிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீவிரமாக விசாரித்து வருகிறது. முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் 3 அமைப்புகளும் நிலத்தை பகிர்ந்துகொள்ள 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த பிரச்சனையில் தீர்வு காண கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு நியமிக்கப்பட்டது. மத்தியஸ்தர் குழு ஜூலை கடைசி வாரத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், சமரச முயற்சி தோல்வியில் முடிந்ததால் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, வழக்கு விசாரணையை பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அயோத்தி வழக்கை நேரலை செய்வதற்கு தலைமை நீதிபதி அமர்வு சம்மதம் தெரிவித்தது. மேலும், நேரலை செய்வதற்கு எந்த அளவு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை ஆராய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக,  இஸ்லாமிய தரப்பினர், மத்திய அரசு, இந்து அமைப்பினர், பொதுமக்கள் அமைப்பினர் உள்ளிட்ட தரப்பினர் சார்பில் 15 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதிக்குள் இந்த வழக்கின் அனைத்து வாதங்களையும் நிறைவு செய்ய உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. நவம்பர் மாதம் 2ம் வாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதால், இந்த முடிவை நீதிமன்றம் எடுத்துள்ளது. மேலும், தலைமை நீதிபதி கூறியுள்ளதாவது, அயோத்தி தொடர்பாக பழைய விஷயங்களை விட்டுட்டு , அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடையக் கூடிய ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளனர். அவ்வாறு இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் திருப்தியடையும் வகையில் தீர்வு காண அறிவுறுத்தியுள்ளார். எனவே, அனைத்து தரப்பினருக்கும் சாதகமான ஒரு முடிவை அவர் தீர்ப்பில் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Ayodhya ,Supreme Court ,case hearing , Ayodhya case, trial, Supreme Court, Chief Justice
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்