×

ராசிபுரம் அருகே மதியம்பட்டி ஏரியில் மீண்டும் நுரை பொங்கியது

ராசிபுரம்: திருமணிமுத்தாற்றில் மழைநீருடன் வெளியேற்றப்படும் ரசாயன கழிவால் ராசிபுரம் அருகே மதியம்பட்டி ஏரியில் மீண்டும் நுரை பொங்கி வழிந்தது. அங்குள்ள தரைப்பாலத்தில் சுமார் 10 அடி உயரத்திற்கு நுரை தேங்கியதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாற்றில் தொடர் மழையால் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இந்த தண்ணீரில் சேலம் மாநகர், கொண்டாலாம்பட்டி மற்றும் நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள சாயப்பட்டறைகள் மற்றும் வாஷிங் பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், சாக்கடை கால்வாய் வழியாக நேரடியாக கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ரசாயன கழிவுகளால் ஆற்று நீர் மாசடைந்துள்ளது.

மேலும், வழி நெடுகிலும் உள்ள ஏரிகளிலும் கலப்பதால் மொத்த தண்ணீரும் மாசடைவது வாடிக்கையாக உள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அருகேயுள்ள மதியம்பட்டி கிராமத்தில், சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் மதியம்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு திருமணிமுத்தாறு வழியாக தண்ணீர் வருகிறது. தொடர் மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், கடந்த 12ம் தேதி ரசாயன கழிவு கலந்ததால் சுமார் 10 அடி உயரத்திற்கு நுரை பொங்கியது. இந்த நுரையானது மதியம்பட்டி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் வரையிலும் தேங்கியது. இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அன்று மாலை வரையிலும் பொங்கி வழிந்து நுரையை கண்டு மக்கள் பீதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், நேற்று காலை மீண்டும் ஏரியில் நுரை பொங்கியது. தரைப்பாலத்தையும் மூழ்கடித்தவாறு நுரை ஆக்கிரமித்திருந்ததை கண்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அப்போது, பலத்த காற்றும் வீசியது. இதனால், காற்றில் நுரை பறந்தது அந்த வழியாக சென்றவர்களின் மீது விழுந்தது. சிறிது நேரத்தில் அந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டதால், அதிர்ச்சிக்குள்ளான மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆள் உயரத்திற்கு தேங்கிய நுரையால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், காலை 10 மணியளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், நீரோட்டமும் சற்று குறைந்தது. சுட்டெரித்த வெயிலால் நுரையும் கரைந்தது. மதியத்திற்கு பின்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததை கண்டு மக்கள் நிம்மதியடைந்தனர். இதையடுத்து, தரைப்பாலத்தின் வழியாக போக்குவரத்து சீரடைந்தது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், திருமணிமுத்தாறு மற்றும் மதியம்பட்டி ஏரி பாசனம் மூலம் இப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகிறது. இதுதவிர, கிணறுகள், ஆழ்துளை கிணறுகளுக்கு நிலத்தடி நீராதாரமாகவும் இந்த ஏரி விளங்குகிறது. இந்நிலையில், சாயப்பட்டறைகள் மற்றும் வாஷிங் பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் திருமணிமுத்தாற்றில் கலப்பதால், மல்லசமுத்திரம்-மதியம்பட்டி சாலையில், திருமணிமுத்தாறு தரைப்பாலம் பகுதியில் நுரை பொங்கி வழிவது வாடிக்கையாக உள்ளது. இதனால், அவதிக்குள்ளாகி வருகிறோம் என்றனர்.

Tags : lake ,Madhyampatti ,Rasipuram ,Madhyampatti Lake , Rasipuram, Madhyampatti Lake
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு