தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: ஸ்ரீரங்கத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

திருச்சி: அரியானா மற்றும் ராமநாதபுரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியான தகவலையடுத்து திருச்சியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீரங்கத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்னையை அடுத்து தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்ததலாம் என உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தற்போது அரியானா மாநிலத்தில் 6 தீவிரவாதிகள் மற்றும் ராமேஸ்வரத்தில் ஒரு தீவிரவாதி பிடிப்பட்டனர். இதனால் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் அனைத்து விடுதிகளுக்கும் போலீசார் சென்று அங்கு தங்கியிருப்பவர்கள் யார், எதற்காக வந்துள்ளனர். விடுதியில் கொடுக்கப்பட்டுள்ள முகவரி சரிதானா, அவர்களிடம் உரிய அடையாள அட்டை ஏதாவது இருக்கிறதா என பல கோணங்களில் ஆய்வு செய்தனர். மாநகருக்குள் நுழையும் பகுதியில் உள்ள 7 சோதனைச் சாவடிகளிலும் போலீசார் வாகன தணிக்கை நடத்தி வருகின்றனர். இது தவிர ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஸ்ரீரங்கம் கோயிலில் கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டது. அதன்படி ரங்கா ரங்கா கோபுரம் நுழைவு வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோயிலுக்கு உள்ளே செல்லும் பக்தர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சேதப்படுத்தப்பட்டது. இதனை தடுக்கும் விதமாகவும், கோயிலில் எவ்வித பிரச்னையும் வராமல் தடுக்கும் விதமாகவும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், அரியானா மற்றும் ராமேஸ்வரத்தில் தீவிரவாதிகள் சிக்கியதாக வந்த ரெட் அலார்ட் தகவலை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிடப்பட்டது என்றார்.

Related Stories: