×

தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அப்போலோவில் ‘புரோஹெல்த்’ திட்டம் தொடக்கம்: டாக்டர் பிரதாப்சி ரெட்டி பேச்சு

சென்னை: ஆரோக்கியமாக வாழ்வதற்கான ‘புரோஹெல்த்’ என்ற விரிவான உடல்நல சுகாதார மேலாண்மை திட்டத்தை அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப்சி ரெட்டி சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற தொற்றா நோய்களின் பாதிப்பில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கான ‘புரோஹெல்த்’ என்ற சுகாதாரமேலாண்மை திட்டத்தை அப்போலோ மருத்துவமனை தொடங்கியுள்ளது. தொற்றாத நோய்களான பக்கவாதம், சர்க்கரைநோய், புற்றுநோய், உடல் பருமன், தூக்கமின்மை போன்ற நோய்களை ஆரம்பத்தில் இருந்தே கண்காணித்து சிகிச்சை அளிக்கவும், தொழில்நுட்ப உதவியுடன் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளவும் ஆரோக்கிய வாழ்வுக்கான ‘புரோஹெல்த்’ என்ற விரிவான உடல்நல சுகாதார மேலாண்மை திட்டத்தை அப்போலோ மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவினை அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தொடங்கி வைத்தார். நோய் வந்தால் எவ்வாறு குணப்படுத்துவது என்றுதான் பலரும் சிந்திக்கிறோம். நோய்களே வராமல் ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி என்று யோசிப்பது இல்லை. அதுதொடர்பான விழிப்புணர்வு, மருத்துவ வசதிகள் அதிகரித்தாலும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்கின்றனர். இளம் வயதினர், பதின் பருவத்தினரும் இப்பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

தொற்றாத நோய்கள் சுனாமி போல உலகத்தை அச்சுறுத்துகின்றன. முக்கியமாக புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் பருமன் ஆகியவை மக்களை அதிகம் பாதிக்கின்றன. இந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை மாற்றி புதிய முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதுதான் புரோஹெல்த் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இது மிகவும் பயன்தரக் கூடிய உடல்நல சுகாதார மேலாண்மை திட்டமாகும். எந்தெந்த பரிசோதனைகள் மேற்கொள்வது, என்ன உணவுகள் உட்கொள்வது, என்னென்ன வாழ்க்கை முறை மாற்றங்களை கடைபிடிப்பது என்பன போன்ற விவரங்களைப் பெறுவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய மென்பொருள் இத்திட் டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் பிரதாப்சி ரெட்டி தெரிவித்துள்ளார்.

அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி பேசும் போது, அப்போலோ மருத்துவமனையின் இந்த புரோஹெல்த் திட்டம் தொற்றா நோய்களை குணப்படுத்தி மக்களின் வாழ்க்கையில் நல்ல, உறுதியான மாற்றங்களை நிகழ்த்தும் என்றனர். விழாவில் அப்போலோ மருத்துவமனைகள் குழும நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி, தடுப்பு மருந்துகள் இயக்குநர் உதயா, இந்தியன் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பத்மஜா சுந்துரு மற்றும் டாக்டர்கள் பங்கேற்றனர்.

Tags : Launch , Infectious Disease, Therapy, Apollo
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!