×

விதிமீறி வைக்கப்பட்ட பேனர்களால் ரகு, சுபஸ்ரீயை இழந்துவிட்டோம்..பேனர் கலாச்சாரமே இருக்கக்கூடாது என்பதே எனது கருத்து: மு.க.ஸ்டாலின்

சென்னை: விதிமீறி வைக்கப்பட்ட பேனர்களால் ரகு, சுபஸ்ரீயை இழந்துவிட்டோம். பேனர் கலாச்சாரமே இருக்கக்கூடாது என்பதே எனது கருத்து என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த 12ம் தேதி குரோம்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீயின் மீது, பேனர் விழுந்ததில் அவர் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பேனர்கள் வைக்க வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்தார். இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்ற ஸ்டாலின் சுபஸ்ரீயின் தந்தை ரவி மற்றும் தாய் கீதாவுக்கு ஆறுதல் கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாது, கடந்த வாரம் ஆளுங்கட்சியின் பேனர்கள் விழுந்து சுபஸ்ரீ என்கிற சகோதரி அகால மரணமடைந்துள்ளார். இதுபோன்று பேனர்கள் திமுகவை சேர்தவர்கள் வைக்கக்கூடாது. முறையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் அனுமதி பெற்று மட்டுமே வைக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, 2017ம் ஆண்டு தி.மு.க.வின் செயல்தலைவராக பொறுப்பேற்ற நேரத்திலேயே நான் வெளிப்படையாக அறிவித்தேன். ஆனால், இன்றைய ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்களை வைக்கின்றனர். அவர்கள் பெயரளவுக்கு ஒன்று, இரண்டு பேனர்களுக்கு மட்டும் அனுமதி பெற்றுக்கொண்டு நூற்றுக்கணக்கான பேனர்களை வழிநெடுக வைக்கின்றனர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்பட ஆளுங்கட்சியை சேர்நதவர்களின் நிகழ்ச்சிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பேனர்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

இவ்விகாரத்தில் உயர்நீதிமன்றம் தொடர்ந்து கண்டனத்தை பதிவு செய்து வந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் ஆளுங்கட்சியினர் செயல்படுகின்றனர். ஏற்கனவே கோவை மாவட்டத்தில் ரகு என்ற சகோதரரை பேனர்கள் பலி கொண்டது. இப்போது, சுபஸ்ரீ என்கிற சகோதரியை பலி கொண்டுள்ளது வேதனையை அளிக்கிறது. எனவே, சுபஸ்ரீயை இழந்து தவிக்கும் அவரது பெற்றோரை சந்தித்து நான் ஆறுதல் கூறியுள்ளேன். அப்போது, சுபஸ்ரீயின் தந்தை ரவி அவர்கள், இந்த பேனர் கலாச்சாரத்தால் என்னுடைய மகள் சுபஸ்ரீ இறந்திருப்பதே கடைசியாக இருக்கட்டும். இனி இது தொடரக்கூடாது. இதற்கு ஒரு முற்றிப்புள்ளி அமைந்திட வேண்டும், என்று உணர்ச்சிவப்பூர்வமாக கூறியதை என்னால் மறக்க முடியாது. என்னை பொறுத்த வரையில், பேனர் கலாச்சாரமே இருக்க கூடாது என்பதே எனது கருத்து, என்று கூறியுள்ளார். பேனர்கள் விவகாரத்தில் திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் பிரமாண தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும், திமுக அறக்கட்டளை சார்பில் சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டதையும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Tags : Raghu ,banning ,Subasriya ,MK.Stalin , MK Stalin, Subashree, DMK, banner, AIADMK
× RELATED அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு...