×

விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக நிலக்கரி கொண்டுவருவதால் ஆண்டுக்கு 123 கோடியளவுக்கு செலவு குறைப்பு: மின்வாரிய ஆலோசனைக்கூட்டத்தில் தகவல்

சென்னை: ‘விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக உள்நாட்டு நிலக்கரி கொண்டு வருவதால், ஆண்டிற்கு சுமார் ₹123  கோடி செலவு குறைக்கப்பட்டுள்ளது’ என, நேற்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், அமைச்சர் தங்கமணி, மின்  உற்பத்தி நிலையங்கள் மற்றும் திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து  ஆய்வினை நேற்று மேற்கொண்டார். இதில்,  தமிழ்நாடு  மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், இணை மேலாண்மை இயக்குநர் சுபோத்குமார் என பலர் பங்கேற்றனர்.அப்போது அமைச்சர், ‘அனல் மின் நிலையங்களில் உலர் மற்றும் ஈர சாம்பலை 100 சதவீதம் முற்றிலும் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விசாகப்பட்டினம் துறைமுக வழியாக உள்நாட்டு நிலக்கரி கொண்டு வருவதற்கு, அந்த துறைமுக கழகத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதி முதல் நிலக்கரி வர துவங்கி உள்ளது.  இதன் மூலம் ஆண்டிற்கு சுமார் 123 கோடி செலவு குறைக்கப்பட்டுள்ளது.  மேலும் 20 லட்சம் டன் வெளிநாட்டு நிலக்கரி வாங்குவதற்கு மின்னனு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.  இதற்கு நேற்று முன்தினம் (16.09.2019) மறுநிலை ஏலம் நடந்ததில்  கிடைக்கபெற்ற விலை, சந்தை விலையைவிட சுமார்  ₹189 கோடி குறைவாக உள்ளது.  மேலும் வட சென்னை அனல் மின் திட்டம் நிலை-3 (1x800 மெகாவாட்), எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம் (2x660 மெகாவாட்), உப்பூர் அனல் மின் திட்டம் (2x800 மெகாவாட்), உடன்குடி அனல் மின் திட்டம் நிலை-1   (2X 660 மெகாவாட்), எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத்திட்டம் (1X660 மெகாவாட்), குந்தா நீரேற்று புனல் மின் திட்டம் (4X125 மெகாவாட்) கொல்லிமலை நீர் மின்திட்டம் (1X20 மெகாவாட்) ஆகிய  மின் திட்டப்பணிகளையும் ஆய்வு   செய்து விரைந்து முடிக்குமாறு கூறினார்.

Tags : Visakhapatnam , Via Visakhapatnam, port,coal , electricity consultation
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...