சிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் குளறுபடி: மனித உரிமை ஆணையத்தில் புகார்

சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள 1325 பணியிடங்களில் சிறப்பு ஆசிரியர் பணியிடங்களான தையல், ஓவியம், விவசாயம், இசை உள்ளிட்ட சிறப்பு பாட ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை  கடந்த 2016ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. அதில் தேர்ச்சி அடைந்தவர்களை அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தெரிவுப் பட்டியல் வெளியிட  வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் கேட்டனர். ஆனால், போட்டித் தேர்வு நடந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்னும் தெரிவுப் பட்டியல் வெளியாவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையே கடந்த 2018ம் ஆண்டு ஒரு தெரிவுப்  பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அந்த பட்டியல் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வெளியாகவில்லை என்று கூறி சிறப்பு ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு இரண்டாவது பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அந்த பட்டியலைப் பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, முதல் பட்டியலில் இடம்பெற்ற  தையல், இசை ஆசிரியர்கள்  பெயர்களில் 14 பேர் நீக்கப்பட்டு இரண்டாவது பட்டியலில் 6 பேர் புதியதாக சேர்க்கப்பட்டு இருந்தது. குறிப்பாக 249 பேர் பெயர்கள் இடம் பெறவேண்டியதில் 242 பேர் பெயர்கள் தான் இடம் பெற்று இருந்தன. மீதம் உள்ள பெயர்கள் பணியிடங்கள்  நிறுத்தி வைத்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வ ாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து சிறப்பு ஆசிரியர்கள் விளக்கம் கேட்டபோது,  ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் பதில் கூறவில்லை. இதையடுத்து, சென்னையில் உள்ள மனித உரிமைகள்  ஆணையத்தில் சிறப்பு ஆசிரியர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்த  புகாரின் பேரில் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளிக்க கடிதம் அனுப்ப மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: