ராகுல்காந்தி குறித்து சர்ச்சை பேச்சு ராஜேந்திர பாலாஜி வீட்டை முற்றுகையிட காங்.முயற்சி: சத்தியமூர்த்திபவனில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

சென்னை: தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராகுல்காந்தியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்ச்சித்து கருத்து தெரிவித்திருந்தார். இதனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து தமிழக இளைஞர் காங்கிரசார் சார்பில்  சத்தியமூர்த்திபவனில் இருந்து சென்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.  இதையடுத்து சத்தியமூர்த்திபவன் முன்பு போலீசார் நேற்று குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஆரூண் தலைமையில், காங்கிரஸ் தொண்டர்கள் சத்தியமூர்த்திபவனில் இருந்து  புறப்பட தயாராகினர்.  இதற்கிடையே, ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியில் வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ்,இளங்கோவன், எம்பிக்கள் திருநாவுக்கரசர், வசந்தகுமார், ஜான்சி ராணி, ஆலங்குளம் காமராஜ், மாவட்ட தலைவர்கள்  எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 150க்கும் மேற்பட்டோர் ராஜேந்திர பாலாஜி இல்லம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.   அவர்களை போலீசார் வெளியில் செல்ல முடியாதபடி  சத்தியமூர்த்திபவன் நுழைவுவாயிலை மூடியும், பேரிகார்டுகள் அமைத்தும் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.  இதையடுத்து, ராகுல்காந்தியை விமர்ச்சித்து பேசிய ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்று  அவருக்கு எதிராக காங்கிரசார் கோஷம் எழுப்பிவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சியினர் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில்,‘‘  அமைச்சராக இருப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். ஆனால் ராஜேந்திர பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார். அவரை பற்றி என்னாலும் எவ்வளவு தரக்குறைவாக வேண்டுமானாலும் பேச முடியும். ராஜேந்திர பாலாஜி தெளிவாக இருக்கிறாரா,  இல்லையா என்று தெரியவில்லை. அவர் மனநல டாக்டரை சந்தித்து சான்றிதழ் பெறவேண்டும். ராஜேந்திர பாலாஜியை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. ஜெயலலிதா  இருந்தபோது அமைச்சர்கள் அடிமையாக இருந்தனர். இப்போது அமைச்சர்கள் கோமாளிகளாக மாறிவிட்டார்கள்’’ என்றார்.

Related Stories: