சொத்துக்காக பெங்களூருக்கு கடத்திச்சென்று பெண்ணை கொலை செய்து எரித்த நில புரோக்கர் கைது: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: சென்னையை சேர்ந்த பெண்ணை பெங்களூருக்கு கடத்திச்சென்று, தூக்கமாத்திரை கொடுத்து, எரித்து கொன்ற நில புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.ஆலந்தூர் புதுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் சுகுமார் (63). இவரது சகோதரி விஜயலட்சுமி (60). இவர், மடிப்பாக்கம் ராஜராஜேஸ்வரி நகர் 3வது தெருவில் வசித்து வந்தார். இவர்களது சொந்த ஊர் கும்பகோணம். இதில்  விஜயலட்சுமி கடந்த  மாதம் 4ம் தேதி ஒரு வழக்கு சம்பந்தமாக மயிலாப்பூரில் உள்ள வழக்கறிஞரை சந்திக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, சுகுமார் மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தனது சகோதரி விஜயலட்சுமியை காணவில்லை என்று புகார் கொடுத்தார். பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சவுரி நாதன் ஆகியோர்  உத்தரவின்பேரில் மடிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விஜயலட்சுமியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, விஜயலட்சுமியின் செல்போன் நம்பரை வைத்து ஆய்வு  செய்தபோது அவர் கடைசியாக பெங்களூரை சேர்ந்த பாஸ்கர் (33) என்பவருடன் பேசியது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தனிப்படை போலீசாருடன் பெங்களூரு சென்று விசாரித்தபோது பாஸ்கர் நில  புரோக்கர் தொழில் செய்பவர் என்பது தெரியவந்தது. ேமலும், விசாரணையில் பாஸ்கர் பெங்களூரு அருகே உள்ள  சிங்கந்தாரா கிராமத்தில் இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று பாஸ்கரை கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தியபோது, விஜயலட்சுமி காணாமல் போனது குறித்து தனக்கு தெரியாது என்று பிடிவாதமாக கூறினார்.எனவே, தனிப்படை போலீசார் பாஸ்கரை மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர். அதில், பாஸ்கர் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்தார். இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவுசெய்தனர். போலீசாரிடம் பாஸ்கர் அளித்த வாக்குமூலம் வருமாறு:மடிப்பாக்கத்தை சேர்ந்த விஜயலட்சுமி,  பெங்களூரு கே.ஆர்.புரத்தில் உள்ள வீட்டை விற்பது சம்பந்தமாக சென்னையிலிருந்து பெங்களூருக்கு அடிக்கடி வருவார். அப்போது புரோக்கர் என்ற முறையில் அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.  கடந்த 2 ஆண்டுகளாக வீடு விற்பது தொடர்பாக சென்னையிலிருந்து விஜயலட்சுமியை பெங்களூருக்கு காரில் அழைத்து வந்தேன். என் மீது அவர்   வைத்திருந்த நம்பிக்கையை பயன்படுத்தி வீட்டை விற்பது தொடர்பாக வேறொருவருடன் ஒரு  தொகையை விஜயலட்சுமிக்கு தெரியாமல் வாங்கினேன். ஆனால் பணம் கொடுத்தவரோ வீட்டை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி தருமாறு கறாராக கேட்டார்.

கடந்த மாதம் 4ம் தேதி நண்பர் சதீசுடன் காரில் சென்னை வந்து விஜயலட்சுமியை சந்தித்தபோது வக்கீலை சந்திக்கப் போவதாக புறப்பட்டுக்கொண்டிருந்தார். ெபங்களூரு வீட்டை 1 கோடியே 20 லட்சத்திற்கு வாங்க ஒரு  ஆள் வந்துள்ளதாக  கூறி சதீசை காட்டினேன். அதனை நம்பிய விஜயலட்சுமியை அழைத்துக் கொண்டு சென்றேன். போகும் வழியில் குளிர்பானத்தில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். இதை குடித்த விஜயலட்சுமி காரிலேயே மயங்கி  கிடந்தார். பெங்களூரு சென்றதும் விஜயலட்சுமியை எழுப்ப முயன்றபோது நினைவில்லாமல் இருந்தார்.  அவர் இறந்து விட்டதால் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு சொத்தை அபகரித்து விடலாம் என முடிவெடுத்து பெங்களூரு பேத்தமங்கலம் புதர்  பகுதியில் சடலத்தை எரித்துவிட்டு சதீசை அனுப்பி விட்டேன். பிறகு ஒன்றும் தெரியாததுபோல்   பெங்களூரு சிங்கந்தரா பகுதிக்கு வந்துவிட்டேன். தற்போது சிக்கிக்கொண்டேன்.இவ்வாறு பாஸ்கர் வாக்குமூலம் அளித்துள்ளார்.இதையடுத்து, மடிப்பாக்கம் போலீசார் பெங்களூரு கோலார் மாவட்டம் பேத்த மங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் சென்னை வந்து நிலப் புரோக்கர் பாஸ்கரை கைது செய்தனர்.

Related Stories: